சென்னை: கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என  பாஜகவுக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை பதிலடி கொடுத்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணியை செய்தியாளர்களிடம் அறிவித்த உள்துறைஅமைச்சர் அமித்ஷா, மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி என்று கூறினார்.  இதைத்தொடர்ந்து பாஜகவினர், தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என கூறி வருகின்றனர். இது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நேற்று (ஏப்ரல் 16)ந்தேதி செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி ஆட்சி என்பது குறித்து பாஜகவிடம் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இருந்தாலும் பாஜக தரப்பில், கூட்டணி ஆட்சி என்றும், தேர்தல் முடிவுக்கு பிறகு அதுகுறித்து முடிவு செய்யலாம் என கூறி வந்தனர்.

இந்த நிலையில், இன்று  தீரன் சின்னமலை திருவுருப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் கலந்துகொண்ட அதிமுக எம்.பி. தம்பிதுரை பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தீய சக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்றால் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். அவரது சொன்னதன் காரணமாக கூட்டணி தொடர்பாக பாஜக தலைவர்கள் அத்வானி மற்றும் வாஜ்பாய் இடம் நான் தான் கூட்டணி குறித்து பேசினேன்.

அப்போதே திராவிட கட்சி எங்களுடன் கூட்டணி வைக்கிறீர்களா என கேட்டனர். அதனடிப்படையில் அப்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. பின்னர், நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்தவுடன் திமுக கூட்டணி அமைத்து.

அது பொருந்தும் கூட்டணியா, பொருந்தாத கூட்டணியா என்பதை ஸ்டாலின் தான் கூற வேண்டும். சந்தர்ப்பவாத கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியை அமைப்பது திமுகவின் கொள்கை.

தற்போது,  மக்கள் நலனுக்காக எப்படி பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தாரோ, அதேபோன்ற எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து உஎள்ளார். நல்ல முடிவு கிடைக்கும். குரல் கொடுப்போம் முஸ்லீம்களுக்கு நன்றாக தெரியும், அவர்களுக்கு ஏதாவதொன்று என்றால் நிச்சயமாக நாங்கள் குரல் கொடுப்போம். முஸ்லீம்களுக்கு எந்தவித இடையூறு வந்தாலும் அதிமுக அவர்கள் பக்கம் நிற்கும். கூட்டணி என்ற நிலைமை வந்தபோது கூட வக்ஃபு சட்டத்தை நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம்.

எங்களது கூட்டணி  திடீரென அமையவில்லை, கூட்டணி குறித்து,   கடந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திலேயே  விவாதிக்கப்பட்டு, இதுகுறித்து  முடிவு எடுப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் கூறியவர்,  தமிழ்நாட்டில்,  கூட்டணி ஆட்சி இதுவரை கிடையாது, இனியும் கிடையாது.  தமிழகத்தில் 2026 இல் தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி கிடையாது.  பாஜகவுடங்  கூட்டணி தான் கூட்டணி, ஆட்சி இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது சரிதான்.

நாங்கள் கொள்கை கூட்டணியில் சிறப்பாக இருப்பவர்கள் என்றார். திராவிட கட்சிகளில் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை மேலும், தமிழகத்தில் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என யாரும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை. இதுவரை நடந்த எந்த தேர்தலிலாவது கூட்டணி ஆட்சி தமிழகத்தில் நடந்திருக்கிறதா? தமிழகத்தில் திராவிட கட்சிகளில் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை. இனி இருக்க போவதும் இல்லை.

2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தனியாக தான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே இல்லை என தம்பிதுரை கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  ஊழல் குறித்து அமித் ஷா பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் இதுவரை பேசாதது ஏன்?, அமித் ஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு தைரியம் இருக்கா? என கேள்வி எழுப்பினார்.