சென்னை:

நிலவேம்பு குறித்து கமல் பேசிய விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று  மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 18-ம் தேதி நிலவேம்பு கசாயம் குறித்து ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். அதில், சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை தனது இயக்கத்தினர் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அரசின் செயல்பாடுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் குறித்து கமல் தவறான தகவலைப் பரப்புவதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 19-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அந்த மனு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்த மனுவில், “தமிழக முதல்வர் பழனிசாமி மீதான பொறாமையிலும், வெறுப்பிலும் அரசுக்கு எதிராக புரட்சி செய்வது போல செயல்படும் கமல், நாட்டின் மதசார்பின்மைக்கும், அமைதிக்கும் ஊறுவிளைவித்து அரசுக்கு எதிராக மக்களை திசைதிருப்பலாம், அவரது கருத்தால் மக்களிடையே பதற்றம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்று தேவராஜன்  குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு பிறகு, “மனுதாரர் புகார் குறித்து முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கையை காவல்துறையினர் எடுக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தேவராஜனுக்கு பதில் அனுப்பிய மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், “நிலவேம்பு குறித்து கமல் பேசிய விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.