டில்லி,

காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன், பாறை எரிவளி எடுக்கும் திட்டம் இல்லை என்று பாமக மக்களவை உறுப்பினர் அன்புமணி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்ர்.

காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் எரிவளி (நிலத்தடியில் இருந்து கிடைக்கும் இயற்கை எரி வாயு – புரோபேன்), பாறை எரிவளி ஆகியவற்றை எடுக்கும் திட்டம் இல்லை; அதற்கான பணிகள் எதுவும் நடைபெற வில்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய விவாதத்தின்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  காவிரி பாசன மாவட்டங்களில் இயற்கை எரிவாயு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

அதில்,  காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் எரிவளி, பாறை எளிவளி, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தும் யோசனை எதுவும் மத்திய அரசிடம் உள்ளதா? என்று ‘ வினா எழுப்பியிருந்தார்.

அதற்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பதாவது,

‘‘தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் எந்தவொரு மீத்தேன் எரிவளித் திட்டமோ, பாறை எரிவளித் திட்டமோ செயல்படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களில் இனிவரும் காலங்களில் பாறை எரிவளி, பாறை எண்ணெய் உள்ளிட்ட எதையும் எடுக்கும் திட்டமில்லை’’ என்று உறுதியளித்தார்.

அதேநேரத்தில் காவிரிப் பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய வினாவுக்கு நேரடியாக பதிலளிக்காத அமைச்சர் பிரதான்,

‘‘ தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு பாசன மாவட்டங்களில் விவசாயத்துடன் சேர்த்து எரிவளி மற்றும் எரிவாயுத் திட்டங்கள் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்று மட்டும் பதிலளித்தார்.