டில்லி

த்தீஸ்கர் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பரவல் மிகவும் அதிகரித்துள்ளது.  இதனால் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து போன்றவை தேவைகளும் அதிகரித்துள்ளன.  பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிர் இழக்க நேரிடுகிறது.  இதையொட்டி பல மாநிலங்கள் மத்திய அரசை ஆக்சிஜன் விநியோகம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளன.

இன்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.  அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம், “ஆரம்பத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது.   அதையொட்டி நான் ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களிடம் பேசினேன்.  தொழிற்சாலைக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இடங்களில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க உத்தரவிட்டேன்.

இன்று சத்தீஸ்கரில் 27 ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.  அவற்றில் இரண்டு திரவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளாகும்.  மாநிலத்தில் தற்போது தினமும் 388.88 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. ந் அதில் எங்கள் மாநிலத்துக்கு 160 மெட்ரிக் டன் உபயோகப்படுத்தப் படுகிறது.   மீதமுள்ளவை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

எங்கள் மாநிலத்தில் இருந்து எங்கும் ஆக்சிஜன் எடுத்துச் செல்ல தடை விதிப்பதில்லை.  இதை நான் பிரதமரிடமும் எடுத்துச் சொல்லி உள்ளேன்.  எனவே எங்களுக்குத் தேவையான அளவு தேவையான நேரத்தில் ரெம்டெசிவிர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் தடையின்றி கிடைக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்,