சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை என அமைச்சர் துரைமுருகன்  தெரிவித்து உள்ளார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசு, தமிழகத்திற்கு  தர வேண்டிய தண்ணீரை திறந்துவிடும்படி உத்தரவிடக்கோரி வலியுறுத்திய தமிழ்நாடு அரசு அதிகாரிகள்,    தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை. காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது.  இதையடுத்து,  கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை திறந்து விடக்கோரி  காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் செல்லுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆகஸ்ட் 11ம் தேதி வரை கர்நாடகா 53.77 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு வழங்கி இருப்பதோ 15.79 டி.எம்.சி தான், பற்றாக்குறை 37.97 டி.எம்.சி தஞ்சை தரணியில் பயிர்கள் எல்லாம் காய்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. தஞ்சை வறண்டால் தமிழ்நாடே வறண்டு போகும் என்பார்கள் என தெரிவித்துள்ளார்.