நெய்வேலி:  என்எல்சிக்கு விரிவாக்கம் தொடர்பாக, மேலும்இ புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை என  அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கான உயர் இழப்பீடு எனும் கருணைத்தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் வேளாண் மற்றும் உலக நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 2006 முதல் 2013 ம் ஆண்டு வரை என்எல்சிக்கு நிலம் கொடுத்த 9 பேருக்கு உயர் இழப்பீட்டுத் தொகையாக 23.3லட்சத்தை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம், என்.எல்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், என்எல்சி நிறுவனத் துக்கு ஏற்கனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேவையான 2500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது என்றவர், அதற்கு உரிய விவசாயிகள், நிலம் கொடுத்தவர்கள் கூடுதல் இழப்பீடு கேட்கின்றனர். அவர்களுக்கு திருப்திகரமான முறையில் இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

என்எல்சி நிறுவனத்திற்காக மேலும்,  25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல என மறுத்த அமைச்சர், மேலும்  புதிதாக நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழ்நிலை தற்பொழுது இல்லை என்றார். மேலும்,  ஏற்கனவே நிலம் வழங்கிய  3 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க என்எல்சி ஒப்புக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.