சென்னை:
தமிழகத்தில் தற்போது தேசியக் குடியுரிமை பதிவேடு கிடையாது, ஸ்டாலின் மக்களை குழப்பி வருகிறார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று உள்ளாட்சி தேர்தலில் தனது சொந்த ஊரில் வாக்குகளை பதிவு செய்த நிலையில், இன்று சென்னை திரும்பினார். முன்னதாக இன்று காலை சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மத்தியஅரசு தமிழக அரசுக்கு சிறந்த ஆளுமைக்கான விருத வழங்கி உள்ளது. இதை காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டாலின் போன்றோர்கள் விமர்சித்து வருகின்றனர். 50 வகை காரணிகளை கருத்தில் கொண்டு மத்தியஅரசு நடத்திய ஆய்வில், தமிழகத்திற்கு சிறந்த ஆளுமை அந்தஸ்தை வழங்கியுள்ளது. இது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி, எங்களுக்கும் மகிழ்ச்சி, இதற்கு உதவிய அதிகாரிகள், அரசு ஊழியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தற்போது நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்குப்பதிவு மறைமுகமாகவே நடைபெற்றுள்ளது. யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானித்துள்ளனர். இது குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை என்றவர், திமுக தலைவர் ஸ்டாலின் தேவையின்றி அச்சப்பட்டு நீதிமன்றத்தை நாடுகிறார்; ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் நாடகம் ஆடுகிறார் என்றார்.
தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, கடந்த 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பின்பற்றப்பட்ட வழிமுறைகள் தற்போதும் பின்பற்றப்படுகிறது, இது குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆட்சியில் அங்கம் வகித்தபோது மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த திமுக இப்போது வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது தேசியக் குடியுரிமை பதிவேடு கிடையாது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களை குழப்பி வருகிறார்கள். பொதுமக்களும், இளைஞர்களும், சிறுபான்மையினரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.