குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை விவசாயப் பெருங்குடி மக்களின் பயன்பாட்டிற்காக அம்மாவின் அரசு கொண்டு வந்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. விவசாய சங்கங்கள், விவசாயப் பிரதிநிதிகள், பாசனம் பெறுகின்ற விவசாய குழு மூலமாக இந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. குடிமராமத்து திட்டத்தின் மூலமாக பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத ஏரிகள் ஆழப்படுவதுடன் ஏரியிலிருந்து அள்ளப்படுகின்ற வண்டல் மண் விவசாயிகளுடைய நிலங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகிறது. பொதுப்பணித் துறையின் கீழுள்ள 14,000 ஏரிகள், படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 26 ஆயிரம் ஏரிகள் உள்ளன.
கிராமப்புறங்களிலுள்ள ஏரிகள், குளங்கள் குட்டைகளை தூர்வாருவதற்காக கடந்த ஆண்டு 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் கிராமப்புறங்களிலுள்ள ஏரிகள், குளங்கள் குட்டைகள் தூர்வாரப்பட்டு, பருவ காலங்களில் பொழிகின்ற மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால், விவசாயத்திற்கும் மற்றும் குடிப்பதற்கும் தேவையான நீர் கிடைக்கின்றது.
பருவ காலங்களில் அதிகமாக பொழிகின்ற மழையின் காரணமாக வெளியேறி கடலில் வீணாகக் கலக்கும் உபரிநீரை வறண்ட பகுதிகளில் இருக்கின்ற ஏரிகள், குளங்களில் நிரப்புவதற்கான திட்டம் தீட்டி, விவசாயிகளின் கனவுத் திட்டமான அத்திக்கடவு – -அவினாசி திட்டத்தை அம்மா அறிவித்தார். சுமார் 1,652 கோடி ரூபாயில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 30 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன, 2021–ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தப் பணி முழுமையாக நிறைவேற்றப்பட்டு விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தேவையான நீர் வழங்கப்படும். இதனால், சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
ஈரோடு மாவட்டத்தில், பருவ காலங்களில் அதிகமாக பொழிகின்ற மழையின் காரணமாக வெளியேறும் உபரி நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, பவானிசாகர் ஆற்றிலிருந்து பவானி வரையுள்ள இடைப்பட்டப் பகுதியில், ஆற்றில் பல்வேறு இடங்களில் 7 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு அம்மாவினுடைய அரசு திட்டமிடவிருக்கிறது. குண்டாற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையிலிருந்து கால்வாய் மூலம் விவசாயிகளுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. எனவே, அக்கால்வாய்களை புனரமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் பிரதான தொழிலான ஜவுளித்தொழில் சிறப்படைய, கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழில்கள் சிறக்க அம்மாவின் அரசினால் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே கைத்தறி மற்றும் விசைத்தறிக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் ஒரே அரசு அம்மாவினுடைய அரசு.
ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான சாலை வசதிகள் வேண்டுமென்ற கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்கிறோம். அதிகளவில் நல்ல சாலைகள் அமைத்துக் கொடுத்திருக்கின்றோம். இன்னும் சில சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்துவதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அச்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
ஈரோடு மாநகராட்சி வளர்ந்து வருகின்ற நகரம். எனவே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேம்பாலங்கள் கட்டித் திறக்கப்பட்டுள்ளது. மேலும், காளிங்கராயன் ஹைவே-யிலிருந்து திண்டல்பாறை வரை உயர்மட்டப் பாலத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்திற்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொடுத்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலுவலக விரிவாக்கத்திற்கான கட்டடப் பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு பல பணிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று முடிந்திருக்கிறது; இன்னும் பல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன; மேலும், பல பணிகள் தொடங்கவிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், தற்போதைக்கு ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்று கூறினார்.
மின் கட்டண வசூலில் குளறுபடி இருப்பதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, மின் கட்டண வசூலில் எந்த குளறுபடியும் இல்லை. நீதிமன்றம் சென்றார்கள், நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு பின்னரும் என்ன சந்தேகம். கொரோனா தொற்று ஏற்பட்டதால் மின் ஊழியர்கள் வீடு வீடாக சென்று கணக்கு எடுக்கமுடியவில்லை. 4 மாதமாக இணைத்து கணக்கீடு செய்தனர். இதனை இரண்டாக பிரித்து கட்டணம் செலுத்துகிறார்கள்.
அதாவது 4 மாதத்திற்கும் சேர்ந்து 800 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி இருந்தால் 400 யூனிட், 400யூனிட் என இரண்டாக பிரித்து அதில் 100 யூனிட் கழித்துக் கொண்டு மீதிக்கு தான் கட்டணம் வசூலிக்கிறார்கள். எனவே இதில் எந்த குளறுபடியும் கிடையாது. ஏதாவது காரணத்தை காட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்று முதலமைச்சர் கூறினார்.
கொரோனா காலத்திலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக தொழில் முதலீடு வந்துள்ளது என்றும் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.