படிப்புக்கும் அறிவாற்றலுக்கும் தொடர்பே இல்லை என்பது காலம் காலமாய் நமக்குச் சொல்லப்படுவதுதான். ஆனால் மதிப்பெண்களின் பின் ஓடும் சமுதாயமாகவே நாம் இருக்கிறோம்.
மதிப்பெண்களில் இல்லை மகத்துவம் என்பதை நிரூபித்திருக்கிறார் ஒரு இளம் விஞ்ஞானி.
அவர் – பள்ளப்பட்டியைச் சேர்ந்த முஹம்மது ரிஃபாக்.
இவர் தயாரித்துள்ள கையடக்க செயற்கைக்கோள் (Satelitte). அமெரிக்காவில் உள்ள நாசா (NASA) விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
இது குறித்து முஹம்பதி ரிஃபாக், “ எனது அப்பா, எனது சிறுவயதிலேயே இறந்துவிட்டார். எங்கள் குடும்பத்துக்கு எனது மாமா மற்றும் உறவினர்கள் உதவி செய்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ( Space Kids India) அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய அறிவியல் போட்டியில் கலந்து கொண்டேன். அதன்பிறகு எனது அறிவியல் ஆர்வத்தைப் பார்த்த அந்த அமைப்பினர், தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சிகளைச் செய்ய எனக்கு உதவினர்.
அமெரிக்காவின் நாசா (NASA) அமைப்பு நடத்திய செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதில் உலகம் முழுவதும் 57 நாடுகளில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் தேர்வான 80 பேரில் நான் ஒருவன் மட்டுமே இந்தியன்.
நான் உருவாக்கிய செயற்கைக்கோள் 64 கிராம் எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் முழுவதும் 3டி பிரிண்ட் தொழில் ( 3D Technology) நுட்பத்தில் கார்பன் ஃபைபரால் ( Carbon Fibre) உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோளுக்கு அப்துல் கலாம் நினைவாக ‘கலாம் சாட்’ (KALAM SAT) என்று பயர் வைத்துள்ளேன்.
டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர் (Technology Demonstrator) வகையை சேர்ந்த இந்த செயற்கைக்கோள், விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சு, அங்கிருக்கும் சூழல், அவற்றால் செயற்கைக்கோள்கள் அடையும் மாற்றம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும். இது வெற்றி பெற்றால், விவசாயம், வானிலை ஆய்வு உள்ளிட்ட எந்த வகையான செயற்கைக்கோளையும் குறைந்த செலவிலேயே தயாரிக்கலாம்.
சப்ஆர்பிட்டல் (Sub Orbital) செயற்கைக்கோளான இதில் 8 சென்சார்கள், ஆன்போர்டு கணினி உள்ளிட்ட நவீன கருவிகள் உள்ளன. இது முழுமையாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது. 240 நிமிடங்கள் விண்ணில் இருக்கும் இந்த செயற்கைக்கோள், பின்னர் கடலில் விழுந்துவிடும். அதனை மீட்டு, மீண்டும் ஆய்வு செய்யலாம்.
இந்த செயற்கைக்கோளை தயாரிக்க ரூ. 1 லட்சம் செலவானது. இதற்கு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு உதவியது. விர்ஜீனியா ஏவுதளத்தில் இருந்து எஸ்.ஆர்.4 ராக்கெட் மூலம் ஜூன் மாதம் இது விண்ணில் ஏவப்படவுள்ளது. இவ்வகை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுவது இதுவே முதல்முறை.
அடுத்ததாக இந்த செயற்கைக்கோளை நிரந்தரமாக விண்வெளியில் நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். மேலும் நிலவில் தரையிறங்கும் வகையிலான ரோவர் இயந்திரத்தை தயாரிக்கும் ஆரம்பகட்டப் பணியிலும் இறங்கியுள்ளேன். அதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு முஹம்மது ரிஃபாக் தெரிவித்தார்.
இது பெரிய சாதனைதானே.. அதுவும் 17 வயதில்!
சரி, இந்த முஹம்மதி ரிஃபாக், சமீபத்தில் நடந்த +2 தேர்வில் எடுத்துள்ள மதிப்பெண் 750தான்.
தலைப்பை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.