பனாஜி
நேற்று இரவு கோவாவில் இருந்து டில்லி சென்ற விமானத்தில் தீப்பிடித்ததாகக் கோவா அமைச்சர் தெரிவித்ததை இண்டிகோ நிர்வாகம் மறுத்துள்ளது.
நேற்றிரவு கோவாவில் இருந்து 180 பயணிகளுடன் டில்லிக்கு சென்ற இண்டிகோ விமானம் எஞ்சின் பழுது காரணமாகத் தரை இறக்கப்பட்டது. அதன் பிறகு அதில் பயணம் செய்த பயணிகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த விமானத்தில் கோவா மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் நிலேஷ் காப்ரல் தனது அதிகாரிகளுடன் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், “நேற்றிரவு விமானத்தில் ஏறி 20 நிமிடங்களில் இடது பக்க எஞ்சின் தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த பயணிகள் பீதி அடைந்து கூச்சல் இட்டனர். ஆனால் விமான ஓட்டி அந்த எஞ்சினை அணைத்து விட்டு மற்றொரு எஞ்சின் மூலமாக விமானத்தைச் செலுத்தி கோவாவில் தரை இறங்கினார்.
நிலைமையை அவர் மிகவும் சரியாகக் கையாண்டார். அதன்பிறகு எங்களுக்கு அடுத்த விமானத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. நாங்கள் சுமார் 4 மணிக்கு டில்லியை அடைந்தோம். பயணிகளில் சிலர் அந்த நேரத்தில் மீண்டும் பயணம் செய்ய விரும்பாததால் வேறு விமானங்களில் இடம் ஒதுக்கப்பட்டது ” எனத் தெரிவித்தார்.
இதற்கு இண்டிகோ விமான நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் நேற்று கோவாவில் இருந்து டில்லிக்கு சென்ற விமான எஞ்சினில் தீப்பிடிக்கவில்லை. இந்த எஞ்சின் கோளாறுக்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.