பாட்னா: மூத்த மைத்துனியும் மாமியாரும் தன்னைக் கொடுமை செய்வதாக வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளார் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மருமகள் ஐஸ்வர்யா.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிறையில் அடைக்கப்பட்டது முதலே, அவரின் குடும்பத்திற்கும் கட்சிக்கும் தொடர் சோதனைதான்.

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாமல் தோற்றது அவரின் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம். இதற்குமுன்னர் நிலைமை இப்படி ஆனதேயில்லை.

அவரின் மூத்த மகன் தேஜ் பிரதாப்பிற்கு சில ஆண்டுகள் முன்னதாக திருமணம் முடிந்து, அந்த மணவாழ்க்கை பிரச்சினையில் இருப்பது செய்திகளில் வெளியாகியிருந்தன. திருமணம் முடிந்த வெறும் 6 மாதங்களிலேயே தேஜ் பிரதாப், விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடினார்.

இந்நிலையில், லாலுவின் மருமகள் ஐஸ்வர்யா தனது மாமியார் மற்றும் மூத்த மைத்துனி மிசா பாரதி மீது வெளிப்படையாக புகாரளித்துள்ளார். அவர், பாட்னாவிலுள்ள லாலுவின் வீட்டு முன்பாக தனது பெற்றோருடன் தர்ணாவிலும் ஈடுபட்டார்.

அவர் கூறியிருப்பதாவது, “கணவருடன் சேர்ந்து வாழும் நோக்கத்தில் புகுந்த வீட்டில் இருந்த எனக்கு உணவு கொடுக்கவில்லை மற்றும் சமையலறையிலேயே நுழைய விடவில்லை. எனது கணவருடன் சேரவிடாமல் தடுப்பதில் எனது கணவரின் மூத்த சகோதரி மிசா பாரதி குறியாக இருக்கிறார். இதற்கு எனது மாமியார் ராப்ரி தேவியும் உடந்தை” என்றுள்ளார்.

இவரின் புகார் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மொத்தம் 7 பெண்களை பெற்று வளர்த்து, திருமணம் செய்துகொடுத்த ராப்ரி தேவியால், வீட்டின் ஒரு (மூத்த) மருமகளை நல்லபடியாக வைத்துக்கொள்ள முடியவில்லையா? என்று முணுமுணுக்கின்றனர் பலரும்.