சென்னை,

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுடன் அமைச்சர்களுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது பட நிறுவன தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று முன்தினம், “வாங்கிய கடனுக்கு வட்டி கேட்டுஅன்புச் செழியன் மிரட்டியதால் தற்கொலை செய்துகொண்டேன்” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு  தற்கொலை செய்துகொண்டார்.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பைனான்சியர் அன்பு செழியன்  தலைமறைவாகி விட்டார்.  இவர் அதிமுக கட்சியில் மதுரை மாவட்ட நிர்வாகியாக இருப்பதாகவும், அமைச்சர் ஒருவரின்  பாதுகாப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

அவரைக் காவல்துறை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், அன்புச்செழியனால் பாதிக்கப்பட்ட திரைத்துறையினர் சிலர் இன்று கூடி ஆலோ சனை செய்து வந்தனர். அதையடுத்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பேசும்போது, அன்புசெழியனுக்கு எம்எல்ஏ, அமைச்சர் யார் பாதுகாப்பு கொடுத்தாலும் ஒரு கை பார்ப்போம் என்று அதிரடியாகவும், ஆவேசமாகவும்  கூறி இருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, பைனான்சியர் அன்புச்செழியனுடன் அமைச்சர்கள் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக  மறுப்பு தெரிவித்தார்.

மேலும், தயாரிப்பாளர்கள் ஆளாக்கு ஒரு கோடி ரூபாய் போட்டு ஒரு சுழற்றி நிதியை ஏற்படுத்தி அதன்வாயிலாக, குறைந்த வட்டியிலேயே உதவி செய்யலாமே என்றும். கேள்வி எழுப்பினார்.

மேலும் நடிகர் பிரகாஷ்ராஜின் கோவை பேட்டி குறித்த  கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், மிரட்டல், அடிதடி போன்ற வற்றில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும் கூறினார்.