சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக கவர்னர் பன்வாரிலால் நியமனம் செய்துள்ளார். இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், துணைவேந்தராக பொறுப்பேற்க உள்ள சூரப்பா, தனக்கு தமிழ்மொழி மிகுந்த ஆர்வம் உண்டு என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் பேராசிரியர் நியமனம், ஆராய்ச்சி மேம்பாடு உள்பட அனைத்து நடவடிக்கைகளிலும் புதிய உத்திகள் கையாளப்படும் என தெரிவித்து உள்ளார்.
தற்போது, பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் (ஐஐஎஸ்சி) கவுரவப் பேராசிரியர் பணியில் இருக்கும், சூரப்பா, அதை ராஜினாமா செய்து விட்டு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக பதவி ஏற்க உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சூரப்பா, தனக்கு தமிழ்மொழி மீது மிகுந்த ஆர்வம் உண்டு என்றும், தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால், நிறையத் தமிழ் திரைப்படங்கள் பார்ப்பேன் என்று கூறி உள்ளார்.
மேலும், தனக்கு தமிழில் பேசுவதைப் புரிந்துகொள்ளும் திறன் உள்ளது. துணைவேந்தர் பொறுப்பை ஏற்றதும், தமிழை நன்கு கற்றுக்கொள்ள முயற்சிப்பேன் என்றும் கூறினார்.
மேலும், இந்திய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாக விளங்குகிறது. அதன் தரத்தை மேலும் மேம்படுத்தவே உழைப்பேன் என்றும், குறிப்பாக, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிட நியமனங்களிலும், ஆராய்ச்சி மேம்பாட்டிலும் புதிய உத்தி கையாளப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் ஐஐடிக்களுக்கு இணையாக அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மேம்பாட்டை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.