ஒரு தற்கொலை கூட இல்லை! பெரியாரின் அதிசய வெற்றிப்போராட்டங்கள்!

Must read

ங்கள் கட்சி தலைவர்கள் ஊழல் வழக்கில் சிறைபட்டாலும், தற்கொலை செய்துகொள்ளும் தொண்டர்கள் நிரம்பியது தமிழ்நாடு. தலைவர்கள் மறைவை தாங்க முடியாமல் அதிகம்பேர் தற்கொலை செய்துகொண்ட வரலாறு உடையது தமிழ்நாடு.
இப்படியான சூழ்நிலையில், தந்தை பெரியார் ஒரு அதிசயிக்கத் தலைவர்தான். அவரது போராட்டங்களுககு கிடைத்த வெற்றியால் பல நல்ல மாறுதல்கள் சமுதாயத்தில் ஏற்பட்டன. ஆனால், அவரது போராட்டங்களில் ஒருவர்கூட தற்கொலை செய்துகொண்டே இல்லை.
பெரியாரின் போராட்ட வழிமுறைகளும் அதிசயக்கத்தக்கவை. இவை குறித்து எழுதுகிறார் பெரியார், திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு.

பெரியார்
பெரியார்

பெரியார் – தான் வாழ்ந்த காலத்திலும், மறைந்து 43 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்னும் பலரால் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத தலைவராகவே இருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் தனது வாழ்க்கையையும், நடவடிக்கைகளையும், இயக்கத்தையும் முழுவதும் திறந்த புத்தகமாகவே வைத்திருந்தவர். 95 ஆண்டு கால வாழ்க்கையின் பெரும்பகுதியை பிரச்சாரம், போராட்டம், சிறைவாசம் என்றே மக்களுடன், மக்களுக்காகவே (உண்மையாக) கழித்தவர். அவர்தம் வாழ்வின் பல்வேறு அத்தியாயங்களிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.
மிகத் தீவிரமான முற்போக்குக் கொள்கைகளை, பிற்போக்குத்தனம் நிரம்பிய சமூகத்தின் முன் எவ்வித சமரசமுமின்றி எடுத்துவைத்தவர். யாருக்காக போராடினாரோ, அவர்களாலேயே கடுமையாக எதிர்க்கவும் பட்டவர்; புரிந்துகொண்டதும் நன்றியுணர்வுடன் போற்றவும் பட்டவர். இவ்வளவுக்கும் நன்றியை எதிர்பார்ப்பது சிறுமைக்குணம் என்ற கருத்துடையவர்.
வாழ்த்துகளையும், வசவையும் குறித்து ஒருபோதும் கவலை கொள்ளாதவர். வாழ்த்துகளுக்கு நான் மயங்கினால் தானே வசவுகளைக் குறித்து நான் கவலைப்படவேண்டும் என்று அதற்கும் பகுத்தறிவு விளக்கம் சொன்னவர்.
எவ்வளவோ தலைப்புகளில் ஆய்வு செய்யப்படவேண்டியவர் அவர். பல்வேறு கோணங்களிலும் ஆழ்ந்து பார்த்து அறியவேண்டியவர் அவர். அவற்றுள் ஒரு தலைப்பை, ஒரு கோணத்தில், சமகாலச் சூழலையொட்டி நாம் பார்க்க முற்படுகிறோம் அது அவரது போராட்டங்கள் குறித்தது.
ஈரோடு நகர சபைத் தலைவர், மாவட்ட மேஜிஸ்திரேட் உள்பட 19 கவுரவ பதவிகளை உதறிய பின் தொடங்குகிறது பெரியாரின் அரசியல் பொதுவாழ்வு. காங்கிரஸ் கட்சியில் சேரும் முன் பிரிட்டிஷார் ஆட்சியில் ராவ்பகதூர் பட்டம் கிட்டவிருந்த நிலையில் அதனையும், அதனுடன் சேர்த்து தான் பெற்றிருந்த பதவிகளையும் சிறப்புகளையும் துறந்துவிட்டு அரசியலில் ஈடுபட்டார் பெரியார்.
காந்தியார்
காந்தியார்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது உயர்ந்திருந்த காந்தியார் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட பெரியார், தனக்கு வரவேண்டிய பெருந்தொகை ஒன்றுக்கான நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அத்தொகையைத் தன் போராட்டத்திற்கான விலையாகக் கொடுத்தார். அதைத் தன் பெயருக்கு டிகிரி செய்து கொடுத்துவிடும்படியும், தான் அதைப் பெற்றுப் பிறகு அவரிடமே தருவதாகவும் சேலம் விஜயராகவாச்சாரியார் பேசிப் பார்த்தும், அதுவும் தன் போராட்டத்திற்கு மாறாக செய்யும் நடவடிக்கையே என ஏற்க மறுத்தார்.
கண்ணம்மையார்
கண்ணம்மையார்

கள்ளுக்கடை மறியலில் தன் குடும்பப் பெண்களை முன்னிலையில் நிறுத்தி, பெண்களை அணிதிரட்டி போராடச் செய்தார். பெரியாரின் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மையாரும் நடத்திய போராட்டங்களால் கள்ளுக்கடை மறியல் பெரும் போராட்டமானது. நாடெங்கும் நடந்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்த வந்த வெள்ளையரிடம், இப்போராட்டத்தை நிறுத்துவது தன் கையில் இல்லையென்றும், அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது என்றும் சொன்ன காந்தியார், அப் பெண்களைப் பாராட்டி தனது ‘யங் இந்தியா’விலும் எழுதினார். அத்தகைய போராட்டத்தின் தொடக்கமாக, தன் தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் பெரியார் – அவை கள் இறக்கப் பயன்படுகின்றன என்பதற்காக!
நாகம்மையார்
நாகம்மையார்

நேரடியாக கட்சி அரசியலில் ஈடுபட்டு, ஏழெட்டு ஆண்டுகளுக்குள்ளாகவே, காங்கிரஸ் கட்சியின் அன்றைய ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தின் செயலாளராகவும், தலைவராகவும் செயல்பட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தினார் பெரியார் ஈ.வெ.ராமசாமி. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்ற ஊரில், வைக்கத்தப்பன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஈழவ மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் நடக்க உரிமை மறுக்கப்பட்டிருந்த சூழலைக் கண்டித்து, அங்கே போராட்டம் நடந்தது. அதில் ஈடுபட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த, மதராஸ் மாகாண காங்கிரஸ் தலைவரான பெரியாருக்குக் கடிதம் எழுதினார்கள். பண்ணைப்புரத்தில் பேசிக் கொண்டிருந்த பெரியாரிடம் இக்கடிதம் சேர்ந்தவுடன், வைக்கம் விரைந்தார் அவர்.
யாரை எதிர்த்து போராடச் சென்றாரோ, அந்த திருவிதாங்கூர் மன்னரே, அரசு மரியாதையுடன் வரவேற்க ஆள் அனுப்பினார். ஏனெனில் அவர் டெல்லி செல்லும் போது ஈரோடு ஸ்டேஷனில் இறங்கி தங்கிச் செல்லும் விருந்தினர் மாளிகை பெரியாருடையது. வரவேற்பை ஏற்க மறுத்து, களத்தில் இறங்கினார்; போராட்டம் விரிவடைந்தது; சிறையில் அடைக்கப்பட்டார். ஒருமுறை விடுவிக்கப்பட்டும், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்.
வைக்கம் போராட்டத்தில்..
வைக்கம் போராட்டத்தில்..

பெரியார் தான் சிறைக்குச் சென்றதும், ஈரோட்டிலிருந்து தன் குடும்பத்தினரையும், நண்பர்களையும் அழைத்துவந்து போராடச் செய்தார். போராட்டம் குன்றாமல் பேருரு எடுத்தது. திருவிதாங்கூர் மன்னர் மறைந்துவிட, ஆட்சிக்கு வந்த ராணி கோயில் தெருக்களில் அனைவரும் நடக்கும் உரிமையை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு இறங்கிவந்தார்.
‘எல்லை தாண்டிப் போய் போராடாதே’ என்று பெரியாரைத் தடுத்த காந்தியாரை அழைத்துவந்து ராணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்தார் ராஜாஜி – பெரியாருக்கு பெயர் வந்துவிடக் கூடாதென்பதற்காக! ‘கோயில் நுழைவுக்காக பெரியார் போராடத் தொடங்கிவிடக் கூடாது’ என்ற நிபந்தனையோடு காந்தியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ராணியார்.
காந்தியார் அதை ஆமோதிக்க…, ‘அதெல்லாம் நான் உறுதி கொடுக்க முடியாது, மக்கள் தயாராகும்போது அதற்கும் களம் அமைந்தே தீரும்’ என்று எச்சரிக்கை செய்துவிட்டு வைக்கம் வீரராகத் தமிழகம் வந்தார் பெரியார். அடுத்த சில ஆண்டுகளில் சவுதார் குளத்தில் அண்ணல் அம்பேத்கர் நடத்திய போராட்டத்திற்கு தூண்டுகோலாக அமைந்தது இந்தியாவின் முதல் மனித உரிமைப் போராட்டமான இந்த வைக்கம் போராட்டம் தான்.
‘சமூக விடுதலை இல்லாத, அரசியல் விடுதலை பயனற்றது’ என்ற நோக்கில் காங்கிரசிலிருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார், தன் இயக்கம் சார்பில் கோயில் நுழைவுப் போராட்டங்களை தமிழகத்தின் முக்கியக் கோயில்களில் நடத்தினார் – முதலில் அதை ஏற்க மறுத்த ராஜாஜியே ஒரு கட்டத்தில் அதற்காக சட்டம் கொண்டுவரவேண்டிய நெருக்கடியை உருவாக்கினார் பெரியார்.
அரசியல் சட்ட எரிப்பு போராட்டம்
அரசியல் சட்ட எரிப்பு போராட்டம்

அங்கு பணிந்த ராஜாஜி, இந்தியை மதராஸ் மாகாணத்தில் (தமிழ்நாட்டில்) கட்டாயப் பாடமாக்கினார். தமிழறிஞர்கள் குரலெழுப்பினர். மக்களைத் திரட்டி அதை பெரும் போராட்டமாக்கி வழிநடத்தினார் பெரியார். தமிழ்நாட்டின் முதல் மொழிப் போர் 1938-இல் கொளுந்துவிட்டெரிந்தது. பெரியார் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். தொடர் சிறைவாசம் பெரியாரின் உடல்நிலையைப் படுத்தி எடுத்தது. கலங்கவில்லை அவர். கைதுசெய்யப்பட்ட தொண்டர்களில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் நடராசனும், அதைத் தொடர்ந்து சென்னையில் இயக்கப் பொறுப்பாளராக இருந்த தாலமுத்துவும் சிறையில் கடும் நோய்க்கு ஆளாகி, மருத்துவமனையில் உயிரிழந்தனர். மொழிக்காக தமிழகத்தின் முதல் களப்பலி இவர்கள் தான். போராட்டம் இன்னும் வேகமெடுத்தது. போராட்டத்தைத் தாங்க முடியாத ராஜாஜி, பதவியை விட்டு விலகினார். ஆளுநர் எர்ஸ்கின் பிரபு ஆட்சியில் இந்தித் திணிப்பை ரத்துசெய்யப்பட்டது.
தாலமுத்து
தாலமுத்து

இன்றைக்கும் சென்னை எழும்பூரில் உயர்ந்து நிற்கும் அரசு அலுவலகக்  (பின்னாளில் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட) கட்டிடத்திற்கான பெயர் தாலமுத்து – நடராசன் மாளிகை என்பதுதான். (பலரும் இவர்களைத் தற்கொலை செய்து கொண்டு போராடியவர்கள் என்று கருதுவர். அது தவறு.)
அதற்குப் பிறகு நீதிக்கட்சியையும், சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்து திராவிடர் கழகத்தை உருவாக்கிய பெரியார், 1948-இல் இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம், மீண்டும் ஆட்சிக்கு வந்த ராஜாஜி புகுத்திய குலக் கல்வித் திட்டத்திற்கு எதிராக நடத்திய போராட்டம் (இது தான் ராஜாஜியை பதவியை விட்டு ஓடச் செய்து, காமராசரை ஆட்சியில் அமரச் செய்தது. இன்றைய மத்திய அரசு புகுத்த நினைக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு இதுவே முன்னுதாரணம்).
மேலும், ஜாதி ஒழிப்புப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், பிராமணாள் கபே பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டம் (தொடர்ந்து ஓராண்டு நடைபெற்றது), ராமன் பட எரிப்பு, தமிழ்நாடு நீங்கிய தேசப் பட எரிப்பு, ரயில் நிலையங்களில் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம், அனைத்து ஜாதியினர் அர்ச்சகராவதற்கான போராட்டம் என தொடர்ந்து நடைபெற்ற மிகப்பெரிய போராட்டங்களுள் ஒரு சிலவற்றைத் தான் மேலே காட்டியிருக்கிறோம், இவை தவிர இன்னும் ஏராளமான போராட்டங்கள் பெரியாரால் நடத்தப்பட்டுள்ளன. தவிர அவரது பிரச்சாரமே பல இடங்களில் பெரும் போராட்டங்களுக்குப் பின் தான் நடைபெற்றது.
இதில் ஜாதி ஒழிப்புப் போராட்டம் என்று போற்றப்படும் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் திராவிடர் கழக வரலாற்றில் அழிக்க முடியாத தியாகத் தழும்பேறிய வரலாறாகும். இன்னும் சொல்லப் போனால், தமிழக வரலாற்றிலேயே மிகப் பெரும் போராட்டமாகும். 10000 பேர் கைது, அதில் பெரும்பாலானோர்க்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை. இத்தனையும் எதற்கு? அரசியல் சட்டம் என்று எழுதப்பட்ட துண்டுக் காகிதத்தைக் கொளுத்தியதற்கு! அந்தப் போராட்டத்திற்கு பெரியார் இயக்கம் கொடுத்த விலை மிகப்பெரியது.
சிறையிலேயே நோய்வாய்ப்பட்டு, பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி இருவரும் மாண்டனர். தஞ்சை சிறைக்குள்ளேயே புதைக்கப்பட்டனர். அப்போது பெரியாரும் கைதுசெய்யப்பட்டு சிறைக்குள் இருக்கிறார்! அன்னை மணியம்மையார் வெகுண்டார். அதற்குத் தனியே கடும் போராட்டம் நடத்தினார். இருவரின் உடல்களையும் பெற்று, மிகப்பெரிய ஊர்வலம் நடத்தி உரிய மரியாதையுடன் உடல்களை அடக்கம் செய்தார்.
நடராசன்
நடராசன்

சாகும் தருவாயில் பலர் சிறையிலிருந்து வெளியனுப்பப்பட்டு, மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் உயிரிழந்தனர். பலர் குடும்பத்தை இழந்தனர். ஆயிரம் ஆயிரம் கண்ணீர்க் கதைகள் இதற்குப் பின்னால் உண்டு. போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதான சிறுவனிடம் கருணை காட்ட விரும்பிய நீதிபதி, “தம்பி, நீ ஒரு தாளைத் தானே கொளுத்தினாய்” என்று கேட்டார். அந்தச் சிறுவன் சொன்னான், “இல்லை. நான் கொளுத்தியது அரசியல் சட்டம் என்று எழுதப்பட்ட வெறும் தாளாக இருக்கலாம்; ஆனால், என் நோக்கம் அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது தான்” என்று. குறைந்த தண்டனை தந்தபோது, “நேரு மாமா, குறைந்தது 6 மாதம் கடுங்காவல் தண்டனை என்றார். நீங்கள் அதற்கும் குறைந்து கொடுக்கிறீர்களே” என்று எதிர்க்கேள்வி கேட்டான். தனக்கான தண்டனை குறைவு என்று வாதிட்ட வரலாற்றை எந்தப் போராட்டம் பெற்றிருக்கிறது?
அன்றைய மத்திய அரசு, அரசியல் சட்டத்தை எரித்தால் கடும் தண்டனை என்றது. பெரியார் இப்போராட்டத்தை அறிவிக்கும் முன், அரசியல் சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே கிடையாது. ஜாதியின் இருப்பை இந்திய அரசியல் சட்டம் பாதுகாக்கிறது என்று பொங்கிய பெரியார், அரசியல் சட்டத்தைக் கொளுத்தப் போகிறேன் என்று அறிவித்ததும், என்ன செய்வது என்று திணறியது அரசு. என்ன தண்டனை என்று சட்டம் இயற்றுவதற்கு அவகாசம் கொடுத்து அதற்குப் பின் போராட்டம் நடத்தினார் பெரியார்.
‘பெரியாரின் போர் முறை வித்தியாசமானது. அது மூலபலத்தைத் தாக்கி அழிக்கும் போர்முறை’ என்றார் அண்ணா. ஆம், எப்போதும் கிளைகளையும், இலைகளையும் அவர் வெட்டியதில்லை; சல்லி வேர்களையும் அவர் கண்டுகொண்டதில்லை. ஆணிவேரையே பிடுங்கி அழிப்பது தான் அவரது போர்முறை.
ஆனால், எந்த ஒரு போராட்டம் என்றாலும் அதில் அதிகபட்ச நேர்மையைக் கடைபிடித்தவர் பெரியார். யாரும் எதிர்பாராத நேரத்தில் போராட்டத்தை நடத்திவிட்டு, ‘வெற்றி வெற்றி’ எனக் கூவ மாட்டார். எந்தவொரு போராட்டத்தை அறிவித்தாலும், அதற்கு முன், எதற்காக அந்தப் போராட்டமோ, அதை நிறைவேற்றுவதற்கான கால அவகாசத்தை அரசுக்கு அளிப்பார். கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், அறிக்கை, ஆர்ப்பாட்டம், போராட்ட அறிவிப்பு, அதை விளக்கி பிரச்சாரம், அதற்குப் பின் போராட்டம் என்று படிப்படியாக நடவடிக்கை எடுப்பார். தண்டனைகளிலிருந்து தப்பிக்க ஒருபோதும் நினைக்க மாட்டார். தான் அறிவிக்கும் போராட்டத்தில், தானே முதல் ஆளாக நின்று களம் காண்பார்.
அம்பேத்கர்
அம்பேத்கர்

 
போராட்டத்தை எப்போது, யார், எங்கே நடத்தப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிவிப்பார். முக்கியப் போராட்டங்கள் எனில், யார் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்ற பட்டியலையும் முன் கூட்டியே வெளியிடுவார். போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தொண்டர்கள் தம் பெயர்களை, உரிய விவரங்களுடன் பெரியாருக்கு அனுப்ப வேண்டும்.
போராட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதையெல்லாம் தன் தொண்டர்களுக்கு முறைப்படி விளக்கமாக, கண்டிப்புடன் அறிவிப்பார். பொது ஒழுக்கத்தை மீறும் செயல்களை ஒருபோதும் பெரியார் அனுமதித்ததில்லை. போராட்டத்தில் கைது செய்யப்பட்டால், போலீசிடம் என்ன வாக்குமூலம் தரவேண்டும். நீதிமன்றத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பது உள்பட விடுதலை இதழில் வெளியிடப்படும். ஜாமீன் கேட்கவோ, நீதிமன்றத்தில் எதிர்வழக்காடவோ கூடாது என்று பெரியார் அறிவித்தால், அதற்குத் தயாரானவர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்கலாம். அப்படித் தான் ஆயிரமாயிரம் பேர் சிறை சென்றார்கள்.
போராட்டத்தின் போது போலீசாரால் தாக்கப்பட்டால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டிய தலைவர் உண்டா? உண்டு, அவர் தான் பெரியார். போலீசார் தாக்கத் தொடங்கினால், போலீசார் அடிப்பதற்கு வசதியாக, குனிந்து முதுகைக் காட்ட வேண்டும். ஒரு போதும் யார் தாக்குகிறார்கள் என்று முகத்தையோ, அவரது பெயரையோ பார்க்கக் கூடாது. ஏனெனில் பின்னாளில் அவரைப் பார்க்கும்போது தனிப்பட்ட பகை வரும். நாம் எதிர்ப்பது அரசை! போலீசார் தாக்குவது அரசின் பிரதிநிதியாக! இதில் தனிப்பட்ட பகைக்கு வேலை இல்லை என்ற கருத்துடையவர் பெரியார்.
அது மட்டுமல்ல, தன்னுடைய இயக்கப் போராட்டத்திலும், பிற நடவடிக்கைகளிலும் துளியளவு வன்முறைக்கும் இடம்கொடாதவர். தொடர்ந்து ஓராண்டு நடைபெற்ற பிராமணாள் கபே பெயரழிப்புப் போராட்டத்தில், ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் ஈடுபடுவோர் பிராமணாள் கபே என்று பெயர் எழுதப்பட்டிருந்த முரளிஸ் கபே கடை முன், கடைப் பெயரை மாற்றச் சொல்லி போராடுவார்கள். சுடுதண்ணீரைக் காய்ச்சி மேலே ஊற்றினாலும் அதைத் தாங்கிக் கொண்டோர் தான் போராட்டக் களத்தில் நின்றனர். அறவழியிலான அந்தப் போராட்டமும் வெற்றியாகவே முடிந்தது,
தன் தொண்டர்களிடமும், இயக்கத் தோழர்களிடமும், குறிப்பாக போராட்டக்காரர்களிடமும் உச்சபட்ச கட்டுப்பாட்டை எதிர்பார்த்தவர் பெரியார். தான் தோன்றித் தனமாகப் போராடுவதோ, வன்முறைக்கு இடம்கொடுக்கும் வகையில் அல்லது தன்னை மாய்த்துக் கொள்ளும் வழியில் போராடுவதோ பெரியாரால் ஒருபோதும் ஏற்கப்படாது.
அதனால் தான் உண்ணாவிரதப் போராட்டத்தையே அவர் ஏற்கவில்லை. அதை சண்டித்தனம் என்றார். தன்னை மாய்த்துக் கொள்ளும் தற்கொலை முயற்சிகள் அவர் இயக்கத்தில் அன்றும், இன்றும் கிடையாது.
பெரியார்
பெரியார்

கட்டுப்பாடற்ற போராட்டங்களை எந்த தயவு தாட்சண்யமுமின்றி நிராகரித்தவர் பெரியார். சட்டம் ஒழுங்குக்கு உட்பட்டு போராடுவதும், சட்டத்தை மீறுவதென்றால், அதையும் அறிவித்துவிட்டு நடத்துவதும் பெரியாரின் போராட்ட முறை! அதனால் தான், கட்டுப்பாடற்ற போராட்டமாக, 1965-இல் நான்காம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கிளர்ந்த போது அதை அவர் ஆதரிக்கவில்லை; எதிர்த்தார். (நஞ்சுண்டும், தீயிட்டுக் கொண்டும் பலர் மாண்டது அந்தப் போராட்டத்தில் தான்!)
தன் கொள்கையே ஆயினும், அதையும் முறைப்படி நடைமுறைப்படுத்த விரும்பியவர் அவர். அதுவே நிலைக்கும் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர். ஓர் இயக்கத்தை எப்படி நடத்தவேண்டும்; தொண்டர்களை (நாம் தொண்டர்கள் என்கிறோம்; அவர் தோழர் என்றே கருதினார், அழைத்தார்) எப்படி அணுக வேண்டும், கட்டுப்பாட்டுடன் பயணிக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், புரிதலுடன் எப்படி வளர்க்க வேண்டும் என்பதிலும் தெளிந்த சிந்தனையுடையவர். அப்படியே இன்றைக்கும் பயணிக்குமாறு தன் இயக்கத்தைக் கட்டமைத்தவர்.
இன்று இயக்கம் காண விரும்பும் எவராயினும், அவர்கள் பெரியாரையே ஏற்காதவர்கள், எதிர்ப்பவர்கள் ஆயினும், அவருடைய இந்த அணுகுமுறையை அவரிடமிருந்து படித்தே ஆக வேண்டும். அது தான் அவர்களது இயக்கத்திற்கு மட்டுமல்ல… சமூகத்திற்கும் நல்லது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article