சென்னை:
யர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையால் அங்கீகாரமில்லாத மனைகள், நிலங்களை பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு கடந்த ஒரே வாரத்தில் 150 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக விற்பனை செய்ய்படுவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அங்கீகாரம் பெறாத மனைகளை விற்பனை செய்வதற்கான பத்திரங்களை பதிவு செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
2
இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் வீட்டுமனைகள், நிலங்கள் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பதிவுத் துறைக்கு சுமார் ரூ.150 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து திமுக ஆட்சியில் பத்திரவுப் பதிவுத் துறை அமைச்சராக இருந்த இ.பெரியசாமி எம்எல்ஏ தெரிவித்ததாவது:
“அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்யக்கூடாது என மத்திய அரசின் பதிவுச் சட்டத்தில் கூறப்படவில்லை. அது வாங்குபவர்கள், விற்பவர்களைப் பொறுத்த விசயமாகும். இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டால் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.  இது குறித்து கேள்வி கேட்க பத்திரவுப் பதிவு அலுவலர்களுக்கு உரிமை கிடையாது. அப்படி பத்திரப்பதிவுத்துறை தடுத்தால், அது தனி மனித உரிமையை தடுப்பது போன்றதாகும்.

ஐ. பெரியசாமி
ஐ. பெரியசாமி

மத்திய அரசின் பதிவுச் சட்டம் இவ்வாறு இருக்கும்போது இதில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியுமென்று புரியவில்லை.  நகர்ப்புறங்களில் தான் அங்கீகார மனையா என்பதை பார்த்து வாங்குகின்றனர். கிராமப்புறங்களில் இதுபோன்ற நடைமுறை கிடையாது. ஒரு இடத்தை வாங்கிய பிறகு அதில் கட்டிடம் கட்டும்போது தான் கண்டிப்பாக அங்கீகாரம் வாங்க வேண்டும். அப்போது தான் கடன் வாங்குவதற்கும், மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பெறுவதற்கும் இந்த அங்கீகாரம் உதவும்.
இவர்கள் வீடு கட்டும்போது அங்கீகாரம் இல்லை எனத் தடுக்கலாம். ஆனால் மனை வாங்குதை தடுக்க முடியாது.
வணிக வரித் துறைக்கு அடுத்தபடியாக தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருவது பத்திரப் பதிவுத் துறை தான்.
தற்போதைய தமிழக அரசுக்கு டாஸ்மாக், வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை இந்த மூன்றும் தான் அதிக வருவாயை ஈட்டித்தருகிறது.  இப்படியான சூழலில் இந்த ஆட்சியாளர்கள் பத்திரப் பதிவுத் துறையில் வழிகாட்டுதல் மதிப்பை ஏற்கெனவே பன்மடங்கு உயர்த்தியதால் பத்திரங்கள் பதிவு குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது ஒரு வாரமாக பதிவுகள் இல்லாததால், அரசுக்கு சுமார் ரூ.150 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
பற்றாக்குறை நிதி நிலையால் ஏற்கெனவே திணறிக்கொண்டிருக்கும் தமிழகத்துக்கு பத்திரப்பதிவுத் துறை வருமான இழப்பு என்பது பெறும் பின்னடைவாகும். உடனடியாக இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஐ. பெரியசாமி தெரிவித்தார்.