சென்னை:

அதிமுக.வில் மூன்று குழல் துப்பாக்கி உள்ளது என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னை ஆர்.கே.நகர் காசிமேடு வீரராகவன் சாலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘ ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலையை தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டது உண்மை என்றால் அப்போது பன்னீர்செல்வமும், பழனிசாமியும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம் தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.

ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் பெற முடியாது. கோடி கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும், உருண்டு புரண்டாலும் அதிமுக டெபாசிட் பெற இயலாது. ஆர்.கே.நகரில் தேர்தலை சந்திக்க எந்த நிலையிலும் திமுக தயார். தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை’’ என்றார்.

‘‘பணப்பட்டுவாடா குறித்து வருமான வரித்துறை தகவல் கூறியதால் தான் முன்பு இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. அதிமுகவில் பழனிச்சாமி, பன்னீர்செல்வம், சசிகலா என மூன்று குழல் துப்பாக்கி உள்ளது’’ என்றார் ஸ்டாலின்.

அதிமுக.வில் பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும் இரட்டை குழல் துப்பாக்கி என்று அக்கட்சியினர் கூறி வரும் நிலையில் ஸ்டாலின் இவ்வாறு கிண்டலாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.