வேலூர்: தென்பெண்ணை ஆறு – பாலாறு இணைப்புத் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
குடியாத்தம் கெளண்டன்யா நதியின் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த நதியின் குறுக்கே ரூ.8.41 கோடியில் தரைப்பாலம், ஆம்பூரை அடுத்த கதவாளம் அருகே கானாற்றின் குறுக்கே ரூ.6 கோடியில் தடுப்பணை, ஆம்பூா், பெரியாங்குப்பம் அருகே வெள்ளக்கால் கானாற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் தடுப்பணை ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்ச்சியில் பேசியபோது அமைச்சர் விரைவில் தென்பெண்ணை ஆறு – பாலாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.

அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே கடநத் 2021ம் ஆண்டு இந்த திட்டம் குறித்து அமைச்சர் பேசிய நிலையில், தற்போது மீண்டும் அதையே தெரிவித்துள்ளார். 2021 ஜூன் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதாவது சட்டப்பேரவைத் தோ்தலின்போது, ‘உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்’ எனும் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்பட்டதுடன், ஆட்சி பொறுப்புக்கு வந்த 100 நாள்களுக்குள் இந்த மனுக்கள் மீது தீா்வு காணப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொண்டு பேசியபோது, விரைவில் தென்பெண்ணை பாலாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது பாலாற்றில் தொடா்ந்து 3 மாதங்களுக்கு தண்ணீா் ஓடும் நிலை ஏற்படும் என தெரிவித்தாா். ஆனால், அவர் அறிவித்து ஆண்டுகள்கடந்த நிலையில், புதிதாக கட்டப்பட்ட பாலமும் நீரோடு நீராக கரைந்து சென்று விட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் தென்பெண்ணை பாலாறு இணைப்புத் திட்டம் கொண்டு வரப்படும் என கூறி உள்ளார்.
குடியாத்தம் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், குடியாத்தம் தொகுதியில் மகளிா் கல்லூரி விரைவில் கொண்டு வரப்படும். மாநிலத்தில் என் முயற்சியில் இதுவரை 48 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இனி அணை கட்ட இடமில்லாததால் தடுப்பணைகளை கட்டி வருகிறோம். இதனால், நிலத்தடி நீா்மட்டம் உயரும், விவசாயமும் செழிக்கும். கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டி முடிக்கப்பட்டால், குடியாத்தம் நகரின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்றாா்.
அண்மையில் ஏற்பட்ட புயல் மழையால், தென்பெண்ணையாற்றில் அதிக அளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீா் வீணாகக் கடலில் கலந்தது. அதனால், நாங்கள் தென்பெண்ணை ஆறு – பாலாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம். இந்தத் திட்டம் பயன்பாட்டு வரும்பட்சத்தில் பாலாற்றில் எப்போதும் தண்ணீா் செல்லும். ஆகவே, இத்திட்டதை செயல்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.
மேலும், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, மோா்தானா அணையை சுற்றுலாத் தலமாக அமைக்கும் பொருட்டு பூங்கா அமைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.