அம்பாசமுத்திரத்தில் இருந்து 4கிலோ மீட்டர் தொலைவில் தென்னழகர் கோயில் உள்ளது.
இத்தலத்தில் பெருமாள் தென்னழகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு காலத்தில் இந்த கோயிலைச் சுற்றி குளம் இருந்ததால் கோயில்குளம் என்று இவ்வூர் அழைக்கபெற்றது. மூலஸ்தானத்தில் பெருமாள் காரை என்னும் கலவையால் செய்யப்பட்ட மூர்த்தியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
பெருமாள் மீது பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி பூலோகத்தில் பல தலங்களில் பெருமாளை தரிசித்தார். அவர் பொதிகை மலைக்குச் சென்றபோது இவ்விடத்தில் சுவாமியை தரிசிக்க விரும்பி, பெருமாளை வேண்டினார்.
பெருமாள் அவருக்கு தாயார்களுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் இப்பகுதியில் பெருமாள் பக்தர் ஒருவர் வசித்து வந்தார். மனதில் பெருமாளை எண்ணி வணங்கி வந்த அவருக்கு, சுவாமியை சிலாரூபமாக தரிசிக்க வேண்டுமென்று ஆசை உண்டானது. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், மதுரை அருகிலுள்ள கள்ளழகர் கோயில் மலையில் தான் சிலாரூபமாக இருப்பதாகவும், அச்சிலையை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் கூறினார்.
அதன்படி பக்தர் சிலையை கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். பின்பு மன்னர் ஒருவரால் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட மூர்த்தி என்பதால் இத்தல பெருமாள் தென்னழகர் என்று அழைக்கப்படுகிறார்.
உள்ளம், உருவம் இரண்டும் அழகாக இத்தலத்து பெருமாளை வேண்டி பலனடையலாம் என்பது நம்பிக்கை.