இன்று: நடிகர் தேங்காய் சீனுவாசன் பிறந்தநாள்
பீடி சைஸில் பாடி..ஆனால் அந்த பாடியை வைத்துக்கொ ண்டு ஆரம்பத்தில் அவர் செய்த அலப்பறைகள்..கொஞ்ச நஞ்சமல்ல.. தேங்காய் சீனுவாசன்..பேரைக்கேட்டாலே ஒரு மாதிரியான உற்சாகம் பிறக்கும்..அதுதான் தேங்காய்.
”என்னடா இங்கிலீசு பேசறேன்னு கேக்கறீயா.. எஜுகேட்டட் ரவுடிடா நான்” என்று சொல்லும் எஸ் பாலசந்தர் இயக்கிய ‘ஒரு விரல்’ (1965) தான் முதல் படம்..ஆனால் இதற்கு முன்பே ஜெய்சங்கர் அறிமுகமான இரவும் பகலும் படத்தில் வாய்ப்பு கிடைத்தும் அது நழுவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவருக்கு தேங்காய் என அடைமொழியை சூட்டியது நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு..கல்மனம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக கலக்கியதை கண்டு தங்க வேலு இனி மேல் இப்படித்தான் அழைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்.
எம்ஜிஆர், சிவாஜி உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் ஜெய்சங்கருடன்தான் அதிக படங்களில் நடித்தார் .இருவருக்கும் இடையிலான நட்பு அப்படி உயர்வாக இருந்தது. விசேஷ நாட்களில் ஜெய்சங்கர், தேங்காய் வீட்டில் ஆஜராகிவிட அதகளமாக இருக்கும். ஜெய்ங்கரை வைத்து தொடர்ந்து படம் எடுத்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தேங்காய்க்காக படங்களில் தனி இருக்கையே போட்டு வைத்திருக்கம்..
இதேபோல எழுபதுகள் முழுவதும் தேங்காய்-மனோரமா ஜோடிதான் தமிழ்சினிமா நகைச்சுவை உலகை ஆட்டிப்படைத்தது.. இருவரும் சேர்ந்து நடித்த நகைச்சுவை பாடல் காட்சிகளும் படு ஹிட்டாகின. மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா, பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே.. என சொல்லிக்கொண்டே போகலாம்
பெண் வேடத்தில், ‘அதே கண்கள்’ நாகேசுக்கு அப்புறம் தேங்காய் கலக்கிய எடுத்த ‘உங்கள் விருப்பம்’ படக்காமெடி ரசிகர்கள் மத்தியில் எவர் எவர் கிரீன்
1972-ல் ‘காசேதான் கடவுளடா’ படத்தில் அவர் கலக்கிய போலிச்சாமி வேடம்.. என்றைக்கும் மறக்கமுடியாது. அதனால்தான் கதாநாயகன் முத்துராமனை விட்டுவிட்டு தேங்காயின் போலிசாமிக்கு பிரமாண்டமான கட்அவுட் டை வைத்து அழகு பார்த்தது ஏவிஎம் நிறுவனம்.
ஜிஞ்சக்கு ஜக்கா..ஜக்கா..மங்ளோத்திரி..தீர்த்தாய, ஆசிர்வாத அமர்க்களா என தேங்காயின் வாயில் வழியாக வெளியே வரும் டயலாக்குகளுக்கு அர்த்தமே கிடையாது என்றாலும் அதை அவர் உச்சரித்த விதம் ரசிகர்கள் மத்தியில் அப்படியொரு கைத்தட்டல்களை தியேட்டர்களில் அள்ளிக்கொடுத்தது.
தமிழ் சினிமாவின் இரண்டாம் தலைமுறை போட்டியாளர்களான எம்ஜிஆர்- சிவாஜி ஆகியோருடன் கலக்கியதைபோலவே மூன்றாம் தலைமுறை ரஜினி-கமல் சகாப்தத்திலும் தேங்காய் கொடி கட்டி பறந்தார். அதிலும் ரஜினி படங்களில் கழுகு, பில்லா, தங்கமகன், படிக்காதவன் என வரிசையாக பட்டையை கிளப்பியிருப்பார்.
எல்லாவற்றிற்கும் உச்சமாக தில்லுமுல்லு படத்தில் அவர் செய்த நகைச்சுவை அக்கப்போர்..எக்காலத்திலும் அழியாது.. தில்லுமுல்லுவில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவருக்கும வசன உச்சரிப் பை சொல்லிக்கொடுத்த இயக்குநர் கே. பாலச்சந்தர், தேங்காயை மட்டும் கட்டுப்படுத்த விரும்பாமல் அவர் போக்கிலேயே விட்டுவிட்டார் .அதனால்தான் அங்கே ரஜினி என்கிற ஹீரோவே பின்னுக்கு தள்ளப்பட்டு கிட்டத்தட்ட தேங்காயின் படமாகவே மாறி அங்கே காமெடி காட்டாற்று வெள்ளமாக பாய்ந்தது.
1985ல் ஸ்ரீதர் இயக்கி மோகன் நடித்து வெள்ளிவிழா கண்ட தென்றலே என்னைத்தொடு படத்தை, தேங்காய் சீனுவாசன் இல்லாமல் நினைத்துப்பார்க்கவே முடியாது, அதுதான் தேங்காய்
தேங்காய், எம்ஜிஆரின் தீவிர பக்தன். எம்ஜிஆரின் படங்களில் அரசியல் புகழ்பாடி வசனங்களை பேசிவதில் பெரும் ஆர்வம் காட்டியவர். கடைசி காலத்தில் கிருஷ்ணன் வந்தான் என சொந்தப்படம் எடுத்து கடுமையான சிக்கலில் மாட்டிக்கொண்டபோது எம்ஜிஆர்தான் கடன்காரர்களிடம் பேசி தேங்காயை மீட்டார்
நகைச்சுவையையும் தாண்டி, தேங்காய் வெளுத்த பாத்திரங்கள் பலவுண்டு. வேதாந்தி நிலைக்கு தள்ளப் படும் கலியுக கண்ணன், பயங்கர பிளாக் மெயில் பாத்திரத்தில் மிரட்டிய, மயங்குகிறாள் ஒரு மாது, பந்தா சினிமா டைரக்டராய், பிரியா, கள்ளச்சாவி போடும் கில்லாடியாக பில்லா, என தனிப்பாதையில் துவம்சம் செய்த தேங்காய் சீனுவாசன் 1988 ஆண்டு இறக்கும்போது அவருக்கு வயது வெறும் 51தான்..
மறைந்த தேங்காய் சீனுவாசனின் 79வது பிறந்த நாள் இன்று!
–ஏழுமலை வெங்கடேசன்