கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தோற்கடித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுவேந்து அதிகாரி மீது நிவாரண பொருட்களை திருடியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு இருந்தே திருணாமுல் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.  பலரும் திருணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து அக்கட்சி சார்பில் தேர்தலில் போட்டி இட்டனர்.  இதில் முன்னாள் திருணாமுல் தலைவர்களில் ஒருவரான சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டு சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.  ஆயினும் அவர் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்று ஆட்சியைப் பிடித்தால் மம்தா முதல்வர் ஆனார்.   தேர்தலுக்குப்  பிறகு திருணாமுல் மற்றும் பாஜக கட்சிகளின் மோதம் மேலும் வலுவடைந்துள்ளது.

பிரதமர் மோடி நடத்திய யாஸ் புயல் நிவாரண கூட்டத்தில் முதல்வர் மம்தா பங்கேற்கவில்லை.  இதனால் கோபம் அடைந்த மத்திய அரசு அம்மாநிலத் தலைமை செயலர் அலபன் பந்தோபாத்யாவை டில்லிக்கு அழைத்தது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.   மம்தா பானர்ஜி அவரை தனது தலைமை ஆலோசகராக நியமித்து பாஜகவுக்குப் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற்றவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி மற்றும் அவர் சகோதரர் திவேந்து அதிகாரி உள்ளிட்டோர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.  நகராட்சி அலுவலகத்தில் இருந்த நிவாரணப் பொருட்களை இவர்கள் அள்ளிச் சென்றதாக எழுந்த புகாரையொட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.