சென்னை

சென்னை விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையில் இரும்புக் கதவில் துளையிட்டு லாக்கர் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்த முழுத் தகவல்கள் இதோ :

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் ஆற்காடு சாலையின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை இயங்கி வருகிறது.   தரை மற்றும் முதல் தளத்தில் இயங்கி வரும் இந்தக் கிளையை நேற்று காலை ஊழியர்கள் திறந்துள்ளனர்.    அப்போது வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையின் இரும்புக் கதவில் துளையிடப்பட்டுள்ளதும் பெட்டகம் உடைக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இதை ஒட்டி கே கே நகர் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.   அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.   கொள்ளை அடிக்கப்பட்ட இடத்தில் இருந்த கைரேககளும் தடயங்களும் சேகரிக்கப்பட்டன.   போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவலின் படி,  கொள்ளை நடைபெற்ற வங்கிக் கிளையின் முதல் தளத்தில் உள்ள ஜன்னலை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே சென்றுள்ளனர்.   தரை தளப்பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு பெட்டக அறையின் இரும்புக் கதவில் கேஸ் வெல்டிங் மூலம் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளை இட்டுள்ளனர்.

உள்ளே இருந்த லாக்கர்களில் 259 மற்றும் 654 ஆகிய எண்கள் கொண்ட லாக்கர்களை உடைத்துள்ளனர்.   அந்த லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த ரூ,35 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 106 சவரன் எடையுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.    இந்த சம்பவத்துக்குப் பின் அந்த கட்டிட நேபாள காவலாளி சபிலால் காணவில்லி.   அதனால் அவர் மேல் காவல்துறையினர் சந்தேகப்பட்டு அவரை தேடி வருகின்றனர்.  அவரைத் தேடி ஒரு காவல்படை நேபாளம் சென்றுள்ளது.

குறிப்பிட்ட இரு பெட்டகங்கள் மட்டுமே உடைத்து திருடப்பட்டதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்குமோ என்னும் கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.    கொள்ளையர்கள் குறித்து முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை ஆணயர் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்ளை அந்தக் கிளையின் வாடிக்கையாளர்களிடையே கடும் பரபரப்பை உண்டாக்கியது.   அங்கு லாக்கர்களில் பொருட்களை வைத்துள்ள நூற்றுக் கணக்கான மக்கள் வங்கியின் முன் குவிந்தனர்.   அவர்களிடம் வங்கியில் தீ விபத்து என மட்டுமே கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்திய ஓவர்சீஸ் வங்கி, “எங்கள் விருகம்பாக்கம் கிளை விரைவில் செயல்படத் தொடங்கும்,   எங்கள் வங்கி என்றுமே பாதுகாப்பை முன்னிறுத்தி வருகிறது.   வாடிக்கையாளர்களின் பொருட்களை பாதுகாக்க வங்கி உறுதியுடன் செயல்படும்” என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

இன்று காலை முதல் வாடிக்கையாளர்கள் இந்தக் கிளைக்கு வரத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,