டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திறப்பது குறித்து, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தினருடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படு கிறது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு, தமிகம் உள்பட தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
கொரோனா முடக்கத்தில் இருந்து இதுவரை 4 கட்டமாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, போக்குவரத்து, வழிப்பாட்டுத் தலங்கள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், மால்கள் என அனைத்தும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், சினிமா தியேட்டர்கள் திறக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 8ம் தேதி இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும், மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு ஆலோசனை நடத்த உள்ள தாகவும், இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாககூறப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் இருந்து யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.