டில்லி:
உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் பனிமலைப்பகுதி தற்போது சுற்றுலாவுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதை அடுத்து, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தது
இந்நிலையில் லடாக் பகுதியிலுள்ள சியாச்சின் பனிச்சிகரத்தை மக்கள் பார்வையிட ராணுவம் அனுமதியளிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த பகுதி, பனிகள் உறைந்து காணப்படும் பகுதி மட்டுமல்லாமல், உலகிலேயே மிகவும் உயரமான போர் பதட்டம் நிலவும் பகுதியாகும்.
இந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவும். அத்துடன் பனி சரிவுகள் சர்வ சாதாரணமாக நிகழும். மேலும் இந்தப் பகுதி பாகிஸ்தான் நாட்டிற்கு அருகில் உள்ளதால் ராணுவ வீரர்கள் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்களின் நிலையை மக்கள் பார்வையிட இந்தப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட வாய்ப்பளிக்கும் வகையிலும், சில ராணுவ பயிற்சி இடங்களையும் பார்வைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
ராணுவ வீரர்களின் வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், இன்று சியாச்சின் சென்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சியாச்சின் பனிச் சிகர பகுதி மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.