டில்லி:
சர்வதேச பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்த கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மோசமான இடத்திலேயே இருந்து வருவது கல்வியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
டைமஸ் உயர் கல்வியின் (டிஹெச்இ) 2018ம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்தியாவின் ஒரு கல்வி நிறுவனம் கூட இடம்பெறவில்லை.
இதற்கு முந்தைய கணக்கெடுப்பில் 201 முதல் 250 வரையிலான பிரிவில் இடம்பெற்றிருந்த பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் இந்த ஆண்டு 251 முதல் 300 வரையிலான பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலில் முதல் 5 இடங்களில் ஐஐஎஸ்சி, ஐஐவி மும்பை, ஐஐடி டில்லி, ஐஐடி கான்பூர், ஐஐடி காராக்பூர் ஆகிய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.
ஆராய்ச்சி பணிகளில் பின் தங்கியதால் ஐஐஎஸ்சி இந்த முறை கீழ் இறங்கியுள்ளது. அதே சமயம் ஐஐடி மும்பை 351 முதல் 400 வரையிலான பட்டியலில் தொடர்ந்து இந்த முறையும் இடம்பெற்றுள்ளது. ஐஐடி டில்லி மற்றும் ஐஐடி கான்பூர் ஆகியவை ஒரு நிலை கீழ் இறங்கி 401 முதல் 500 மற்றும் 500 முதல் 600 வரையிலான பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து ‘தி’ குளோபல் ரேங்கிங்ஸ் செய்திப்பிரிவு இயக்குனர் பிப் பாதே கூறுகையில், ‘‘இந்த பட்டியலில் இந்தியா பின் தங்கியிருப்பது கவலை அளிக்கிறது. சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளின் கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் முன்னோக்கி சென்றுள்ளன’’ என்றார்.
சர்வதேச அடிப்படையில் இந்திய கல்வி நிறுவனங்களின் செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வெளிநாட்டு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கவும் இந்திய கல்வி நிறுவனங்கள் தவறிவிட்டன.
அதே சமயம் இந்திய கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் பயில்வதற்கான எண்ணிக்கையையும் அரசு வரையறை செய்துள்ளது. சர்வதேச பேராசிரியர்களை நீண்ட நாட்கள் பணியமர்த்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும் இந்த பின்னடைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அடுத்து வரும் நாட்களில் இந்திய கல்வி நிறுவனங்களின் செயல்பாடு முன்னோக்கி செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வருகையையும் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.
எனினும் 20 சர்வதேச தரத்திலான கல்வி நிறுவனங்களை தொடங்க மத்திய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதிகளவில் நிதியை முதலீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்டியலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து கேம்பிரிட்ஜ், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்டான்போர்டு பல்லைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளது.
மொத்தம் 77 நாடுகளை சேர்ந்த ஆயிரம் பல்கலைக்கழகங்கள் இந்த தர வரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த பட்டியலில் அமெரிக்க பல்லைக்கழகங்கள் முதல் 200 இடங்களை பிடித்துள்ளது. முதல் 30 இடங்களில் சீனாவின் இரு கல்வி நிறுவனங்கள் முதன் முறையாக இடம்பிடித்துள்ளன.