சென்னை: சென்னைக்கு  குடிநீர்  வழங்கும்  ஏரிகளின் நீர்மட்டம் கிடு கிடுவென  உயர்ந்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருமழை காலத்தையொட்டி, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.  கடந்த டிசம்பர் இறுதி முதல் ஜனவரி 2ந்தேதிவரை  ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை கொட்டியது. இதனால், வட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பிய நிலையில், அணைகளும் நிரம்பி, தண்ணீர் வெளியேற்றப்பட்டன.

இந்த மழை காரணமாக  சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டங்களும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.  தற்போதைய நிலையில், சென்னை குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து நீர் இருப்பு 8 டி.எம்.சி உள்ளது என நிர்வளத்துறை தெரிவித்து உள்ளது.

மேலும்,  கடந்த 6 நாட்களில் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு 2.6 டி.எம்.சி. நீர்வரத்து இருந்ததாகவும், கடந்த 30-ம் தேதி 5 ஏரிகளில் 47.62% நீர் நிரம்பியிருந்த நிலையில் இன்று 70.47% நீர் இருப்பு உள்ளது.  அதன்படி,  சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 5.599 டி.எம்.சி.யாக இருந்த நீர் இருப்பு இன்று 8.285 டி.எம்.சி.யாக உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

ஏரிகளில் தேவையான நீர் உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.