2ஜி வழக்கின் தீர்ப்பு வரும் செப்டம்பர் 20ல் அறிவிக்கப்படும் என்று டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மகள் கனிமொழி எம்.பி. மற்றும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா ஆகியோர் மீதான 2 ஜி வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு 2 ஜி அலக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
ஸ்வான் என்ற டெலிகாம் நிறுவனம் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதாகவும், இதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி., கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சுமார் ஏழு வருடங்களாக இந்த வழக்கு டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு, நீதிபதி ஓ.பி.ஷைனி வழக்கின் தீர்ப்பை ஆகஸ்டு 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆனால் வழக்கின் முழு ஆவணங்கள் முழுமையாக தயாராகாததால் இந்த வழக்கின் தீர்ப்பு பற்றிய அறிவிப்பை செப்டம்பர் 20 தேதி தெரிவிப்பதாக நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துள்ளார்.