சென்னை: தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய வேங்கை வயல் விவகாரம் நடைபெற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த விவகாரத்தில் எந்தவொரு மேல்நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தமிழ்நாடு அரசு மவுனம் காத்து வருவது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழ்நாடு மீதான சாதிய வன்கொடுமை வடுவாகவே மாறி உள்ளது.
அரசையும், அரசின் திட்டங்களை விமர்சிப்பவர்களை இரவோடு இரவாக கைது செய்து வரும் திமுகஅரசும், அதன் காவல்துறையும், குடிநீர் வழங்கும் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் தொடர் மவுனம் காப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகளாகியும் இதுவரை எந்தவொரு குற்றவாளியும் கைது செய்யப்படாது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நூற்றாண்டின் மாபெரும் அவமான சின்னத்தை உருவாக்கியுள்ள வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்து இரு ஆணடுகள் ஆன நிலையில், , இன்று வரை இந்த கொடூரத்தை, கேவலத்தை, அராஜகத்தை, குரூரத்தை செய்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த முடியாத தமிழக அரசின் ‘கையாலாகாத்தனம், அலட்சியம்’ ஏழை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமத்துவம், சமூக நீதி , திராவிட மாடல் அரசு என மார்தட்டிக்கொள்ளும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியின் கரும்புள்ளியாக அவரது மகுடத்தில் வீற்றிருக்கிறது. இன்னும் திமுக அரசு சமூக நீதி குறித்து பேசுவது நகைப்புக்குரியதாகவே கருதப்படுகிறது.
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இன்றுடன் (டிச.26) 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாதது திமுக அரசின் கையாலாகாதனம் என எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது 2022 டிச. 26-ம்.தேதி தெரியவந்தது. நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, அந்த பகுதி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், பின்னர் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரித்தது. 220-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்த சிபிசிஐடி போலீஸார், 5 சிறுவர்கள் உட்பட 31 பேரை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தினர். அதில், ஒரு காவலர் உட்பட 5 பேரை குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தினர். 10 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த அனுமதி கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனிடையே, வேங்கைவயலுக்குள் அத்துமீறி சென்று மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சேதப்படுத்தியது, தொடர் போராட்டங்கள் காரணமாக வெளியூர் ஆட்கள் வேங்கைவயலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஊரை சுற்றிலும் 7 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தலா 2 போலீஸார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் நடைபெற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாதது வேங்கைவயல் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கூறிய மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் கேட்டபோது, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பலரிடம் டிஎன்ஏ சோதனை செய்தும்கூட செய்தோம். உண்மை குற்றவாளியை கண்றிய வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடும் என்றார்.
இதற்கிடையில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அந்த பகுதி மக்கள், இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதனை கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். பின்னர் அவர்களை அதிகாரிகள் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறி அவர்களை வாக்களிக்க வைத்தனர். ஆனால், இதுவரை திமுக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அக்கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் சாதி இல்லை என்று ஆளும் திமுக அரசு கூறினாலும், சாதியை வைத்துதான் அரசியல் செய்கிறது, மக்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் சாதிதான் ஆட்சியாளர்களுக்கு துணை போகிறது என்று கூறிய பலர், தமிழகம் சாதி என்கிற சாக்கடை ஊறிக் கிடக்கிறது, அதன் எதிரொலிதான் புதுக்கோட்டை சம்பவம். இந்த கொடூர சம்பவம் காரணமாக தமிழ்நாட்டின் மகுடத்தில், வேங்கை வயல் சம்பவம் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்த சம்பவத்தின் வடுக்கள்ஒருபோதும் மறையாது என்றும் கூறி வருகின்றனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய வேங்கை வயல், கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தப்பட்டு வந்தாலும், குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த அந்த கயவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
தமிழக வரலாற்றில் வேங்கை வயலும் அந்த ஊரில் இருக்கும் குடிநீர் தொட்டியும் ஒரு சாதிய வன்கொடுமை வடுவாகவே மாறிப்போனது. இது தமிழநாட்டுக்கு தலைகுனிவு என்பது மட்டுமின்றி, தமிழகத்தின் சாபக்கேடாகவும் பார்க்கப்படுகிறது. தமிழக வரலாற்றில் மறக்க முடியாத கொடூர சம்பவமாக மாறி உள்ளது.