தஞ்சை: பசுமைப் புரட்சிக்கு பிறகு அதிகளவில் வேளாண்மையில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வருவதால் புற்றுநோய் பாதிப்பு நாட்டில் அதிகரித்துள்ளது என நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.

இந்தியாவில் புற்றுநோய் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற்போது உள்ளதைப்போல இன்னும் 20 ஆண்டுகளில் இருமடங்கு புற்றுநோய் தாக்கம் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 1,300 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். நம் நாட்டில் மார்பகம், வாய் புற்றுநோய், கர்ப்பப்பை வாய், இரைப்பை, நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள்தான் அதிகம். புற்றுநோய் பற்றி மக்கள் இன்னமும் சரியாகப் புரிந்துகொள்ளாத நிலையே புற்றுநோய் அதிகரிப்பு காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தஞ்சாவூரில் நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழா தொடங்கியது. 2-ம் நாள் விழாவை நேற்று தொடங்கி வைத்து சி.மகேந்திரன் பேசியது: பாரம்பரிய, இயற்கையாக மேற்கொள்ளப்பட்டு வந்த உழவுத் தொழில், ரசாயனப் பயன்பாட்டால் அழிவதைக் கண்டு வேதனைப் பட்டு தான், நம்மாழ்வார் தனது பணியை விட்டு வெளியேறி, இயற்கை விவசாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பசுமைப் புரட்சிக்குப் பிறகு புற்று நோய் அதிகரித்ததற்கு ரசாயன உரங்கள் பயன்பாடு தான் காரணம். மகசூலை அதிகரிக்கும் நோக்கில் உரங்களைப் பயன்படுத்துவதால் புற்று நோய் உருவாகிறது. இதனால், நிலம் அழிந்து வருகிறது. ரசாயனப் பயன்பாட்டுக்கு எதிராக நம்மாழ்வார் நடத்தியது முதல் புரட்சி என்றால், நாம் 2வது புரட்சி நடத்த வேண்டியிருக்கிறது.
மக்கள் மனங்களில் மாற்றம், எளிய மக்களின் மாற்றம், கொள்ளையில் இருந்து விடுபடக்கூடிய மாற்றம் ஆகியவை தான் புரட்சி. எனவே, மக்களின் சிந்தனை மாற வேண்டும் என்றார்.
விழாவில் தி.பால தண்டாயுதம், பேராசிரியர்கள் ஜவகர்நேசன், தீபமாலா, முற்போக்கு பெண்கள் சிந்தனையாளர் ரோகினி, அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி, எஸ்.செந்தூர் பாரி உள்ளிட்டோர் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில் பேசினர். இந்த விழா நேற்றுடன் நிறைவுபெற்றது.

புற்றுநோய்
புராஸ்டேட் புற்றுநோயைக் கண்டறிய ஆண்டுக்கு ஒருமுறை பி.எஸ்.ஏ. ரத்தப் பரிசோதனையும், சோனோ கிராம் பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும்.
நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய, முக்கியமாகப் புகைப்பிடிப்பவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது சளிப் பரிசோதனை – மார்பு எக்ஸ்ரே எடுத்துக்கொள்ள வேண்டும்.
குடல் புற்றுநோய்க்கு ஆண்டுக்கு ஒரு முறை மலப் பரிசோதனை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நுண்குழாயை ஆசனவாயில் செலுத்தும் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.
40 வயதைக் கடந்த ஒவ்வொரு பெண்ணும் தங்கள் மார்பகத்தில் கட்டி ஏதேனும் உள்ளதா என்பதை சுயமாகப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால், மருத்துவரின் உதவியை நாட வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மமோகிராம் என்கிற பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது (முக்கியமாகக் குடும்பத்தில் யாருக்காவது மார்பகக் கட்டி வந்திருந்தால்). மார்பகப் புற்றுநோய் தொடக்க நிலையில் கண்டறியப்பட்டால் அறுவைசிகிச்சை மட்டும் போதுமானது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்: இந்த நோயைத் தொடக்க நிலையில் கண்டறிய பாப் ஸ்மியர் (Pap smear) பரிசோதனை உதவுகிறது. 35 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் இப்பரிசோதனையை ஆண்டுக்கு ஒருமுறை செய்துகொள்வது அவசியம். இதன்மூலம் கர்ப்பப்பை வாயில் கிருமித்தொற்று, புற்றுநோய் அல்லது புற்றுநோயாக மாறக்கூடிய நோய்கள் போன்றவற்றைக் கண்டறிய முடியும். சந்தேகத்துக்குரிய விதத்தில் பரிசோதனை முடிவுகள் இருப்பின் பயாப்சி போன்ற பரிசோதனை செய்யப்படும்.
சினைப்பைப் புற்றுநோய்க்கு ஆண்டுக்கு ஒரு முறை ஸ்கேன் (CA125) ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது.
பரிசோதனைகள்: ஒருவருக்குப் புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகப்பட்டால், முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். எந்த இடத்தில் புற்றுநோய் (எடுத்துக்காட்டு: மார்பு, கழுத்து, தோல், எலும்பு), எந்த நிலையில் உள்ளது, தொடக்க நிலையிலா அல்லது முற்றிய நிலையிலா, புற்றுநோய் வேறு எங்காவது பரவியுள்ளதா என்பது கண்டறியப்படும். பின்பு ரத்தப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே – சி.டி., எம்.ஆர்.ஒ., பெட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகளைச் செய்ய வேண்டியிருக்கும். புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அதை உறுதிசெய்ய அக்கட்டிக்குள் சிறு ஊசியைச் செலுத்தி, அதன் மூலம் கட்டியிலிருந்து சிறிது திசு பரிசோதனைக்கு எடுக்கப்படும் (FNAC) . தேவைப்பட்டால் கட்டியைச் சிறிய அளவுக்கு அறுவை செய்து எடுத்து (Biopsy) பரிசோதனைக்கு அனுப்பப்படும்.
சிகிச்சை முறைகள்: புற்றுநோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அதற்குத் தக்க சிகிச்சை அளித்து, பின்பு தொல்லை ஏதுமின்றி 5 ஆண்டுகள் கடந்துவிட்டால், ஒருவர் புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டதாகக் கருதலாம்.
புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ள நடுத்தர வயதிலிருந்தே விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை அறவே ஒழித்து, காய்கறி, பழங்கள் – நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை உண்டு, தேவையான உடற்பயிற்சியும் செய்துவந்தால், புற்றுநோய் நெருங்காது.