ஆலுவா, கேரளா
பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான திலீப் போலீசாருடன் தற்போது எடுத்துக் கொண்டதாக பரவி வரும் செல்ஃபி நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டது என்னும் உண்மை வெளியாகி உள்ளது.
நடிகை பாவ்னா பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அது நடந்து சில மணித்துளிகளுக்குள் திலீப் இரண்டு போலீசாருடன் சிரித்தபடி எடுத்துக் கொண்ட செல்ஃபி கஸ்டடி செல்ஃபி என்னும் தலைப்பில் அனைத்து ஊடகங்களிலும் வைரலாக பரவியது
ஒரு சிலர் கேரளாவின் செல்ஃபி மோகம் என தலைப்பிட்டு ஷேர் செய்ய ஆரம்பித்தனர். ஒரு சிலர் குற்றம் சாட்டப்பட்ட நடிகருடன் காவலர் செல்ஃபி என பதிந்தனர். அனைவரும் காவலில் உள்ள திலீப் உடன் தற்போது போலிசார் எடுத்துக் கொண்ட செல்ஃபி என்றே அதை பரப்பினர்.
அந்த புகைப்படத்தில் உள்ள காவலர்களில் ஒருவரான அருண் சைமன் இதைக் கண்டு அதிர்ச்சி அடந்தார். அவர் திருச்சூர் இருஞ்சிலக்குடா காவல் நிலையத்தில் பணி புரிபவர். நான்கு மாதங்களுக்கு முன் நடிகர் திலீப் உடன் எடுத்துக் கொண்டு அதை முகநூலிலும் அப்போதே பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம்தான் இப்போது வைரலாக பரவிய செல்ஃபி
இந்த புகைப்படத்தைக் கண்ட பலரும் தொலைபேசியில் அருண் சைமனை விசாரிக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் விளக்கம் சொல்லி சொல்லி ஓய்ந்து போன அருண் இந்த புகைப்படம் ஒரு திரைப்பட ஷூட்டிங்குக்காக இலஞ்சிக்குடா சர்ச்சுக்கு திலீப் வந்த போது எடுக்கப்பட்டது என்பதை முகநூலில் பதிந்தார். அப்போது திலீப் கைது செய்யப்படுவார் என தனக்கு தெரியாது எனவும் பதிந்துள்ளார்.
மேலும், அவர் அந்தப் புகைப்படத்தின் பின்னணியில் திலீப் பயன்படுத்தும் கேரவான் உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை தான் ஏற்கனவே முகநூலில் பதிந்து விட்ட போதிலும் அதை பலரும் தவறாக இப்போது காவலில் உள்ள நடிகருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி என கருதுவதை கண்டித்துள்ளார்.