கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் கே.ஆர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக காங்கிரஸை சேர்ந்த 12 எம்.எல்.ஏக்களும், மஜதவை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்களும் என மொத்தம் 15 எம்.எல்.ஏக்கள் சமீபத்தில் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து, அது தொடர்பான கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினர். இதனால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சபையில் நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்த அம்மாநில முதல்வர் குமாரசாமி, அதன் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய விவாதம், சனிக்கிழமை முழுவதுமான நீடித்தது. இதனால், ஆளுநர் சனிக்கிழமையே வாக்கெடுப்பு நடத்த 2 முறை கெடு விதித்தார். ஆனால் கெடு நேரம் முடிந்தும், வாக்கெடுப்பு நடத்தப்படாமல், திங்கட்கிழமைக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை 11 மணிக்கு அவை கூடிய நிலையில், தொடர்ந்து விவாதம் நடத்தப்பட்டது. இரவு 8 மணிக்கும் மேல் விவாதம் நீடித்ததால், அவையை ஒத்திவைக்கும் படி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை ஏற்க பாஜக எம்.எல்.ஏக்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடக சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. பலரும் உணவு உட்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக கூறி, சபையை ஒத்திவைக்க கர்நாடக அமைச்சர்கள் கூறியும், சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இது ஒரு பக்கம் நடந்துக்கொண்டிருக்கும் போதே, குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டதாக கூறி வெளியான போலி கடிதத்தால் அவையில் பரபரப்பு தொற்றியது. இது தொடர்பாக அவையில் பேசிய குமாரசாமி, தன் மீது களங்கம் ஏற்படுத்தவே இதுபோல சிலர் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். முதல்வர் குமாரசாமி தொடர்ந்து பேசியதால், விவாதம் நீண்டது. இதன் காரணமாக இரவு 11:45 வரை அவை நீடித்தது.
சரியாக 11:45க்கு பேசி முடித்த குமாரசாமி, அவையை விட்டு எழுந்து சென்றார். அவரை பின் தொடர்ந்து துணை முதல்வர் பரமேஸ்வராவும் அவையை விட்டு எழுந்து சென்றார். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா ? என்கிற கேள்வியை பாஜக எம்.எல்.ஏக்கள் முன்வைத்தனர். தொடர்ந்து கூச்சல் மற்றும் குழப்பம் நீடிப்பதால், அவையை நாளை காலை வரை ஒத்திவைப்பதாக உத்தரவிட்ட சபாநாயகர், காலை 10 மணிக்கு அவை நடவடிக்கை தொடங்கும் என்றும், 4 மணிக்குள் விவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.