சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,97,114 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகத்திலும் சென்னை உள்பட மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தடுப்பூசி மருத்துவர் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பலர் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால், முன்களப் பணியாளர்கள் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி வருகிறார். முதல்கட்ட தடுப்பூசி போடும் பணி 20ந்தேதி உடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து முதல்கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்- 1,97,114 அதிகரித்துள்ளது நேற்று ஒரே நாளில் மட்டும் 11,815 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவர்களில், கோவிஷீல்டு – 7,860 பேருக்கும், கோவாக்ஸின் – 2,039 பேருக்கும் போடப்பட்டு உள்ளதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், சென்னை சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள பூங்காவில் 30 வகையான மரக்கன்றுகள் மூலம் மியாவாக்கி அடர் வனக்காடுகள் உருவாக்கும் பணியை தொடங்கி வைத்த பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை சென்னையில் சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக தடுப்பூசி மையங்கள் கூடுதலாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி போடும் வகையில், தனியாக 2 அல்லது 3 மையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் யாரும் பயப்படவேண்டாம். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றார். மேலும், கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், முககவசம் அணிவதை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.