மதுரை: மணமகள் என்ற அடைமொழிக்குள் திருநங்கையும் சேர்க்கப்பட வேண்டும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் ஒரு நபர் அமர்வு, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும், திருநங்கைகளாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு, மாற்று பாலின அறுவை சிகிச்சை செய்வதற்கு தடை விதிக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அருண்குமார் என்பவருக்கும், திருநங்கை ஸ்ரீஜா என்பவருக்கும் நடைபெற்ற திருமணத்தை, இந்து திருமண சட்டப்படி பதிவுசெய்ய முடியாது என பதிவாளர் அலுவலகம் மறுத்துவிட்டது. ஏனெனில், மணமகள் என்பவர், திருமண நாளன்று பெண்ணாக இருக்க வேண்டுமென விளக்கம் தரப்பட்டது.
இதை எதிர்த்து மணமக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
இதுதொடர்பான பழைய வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றிலிருக்கும் மேற்கோள்களை எடுத்தாண்ட நீதிபதி, “மணமகள் என்ற அடைமொழி, திருநங்கைக்கும் பொருந்தும்” என்ற தீர்ப்பை வழங்கினார்.
“மணமகள் என்ற அடைமொழி மாற்றத்திற்கு உட்பட முடியாத ஒன்றல்ல” என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
எனவே, இந்த திருமணத்தை பதிவு செய்யுமாறு பதிவாளர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டார். மேலும், திருநங்கைகளாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு, மாற்று பாலின அறுவை சிகிச்சை செய்வதற்கு தடை விதிக்கும் வகையில், தமிழக அரசு அரசாணைப் பிறப்பிக்க வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டார்.
திருநங்கைகளின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் இந்த தீர்ப்பு ஒரு மைல்கல் என வர்ணிக்கப்படுகிறது.
– மதுரை மாயாண்டி