சென்னை,
தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று கூடுகிறது.
தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. இன்று காலை 9.30 மணி அளவில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 25 தினங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
முதல்வர் நீண்ட காலம் சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனையின் அறிவிப்பை தொடர்ந்து, கவர்னரின் அறிவுறுத்தலின் பேரில் முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த இலாகாக்கள் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மாற்றப்பட்டது. இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா இருக்கிறார்,
இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், இன்று காலை 9.30 மணியளவில் தமிழக அமைச்சரவை கூடுகிறது.
இந்த கூட்டத்தில் அரசு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது; உயர் நீதிமன்ற உத்தரவுபடி, உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்க, அவசர சட்டம் கொண்டு வருவது மற்றும் காவிரி நதி நீர் விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
கடந்த மே., மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக அரசு பொறுப்பேற்றப்பின் நடைபெற இருக்கும் முதல் அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து துறை பொறுப்புகளை ஏற்ற பிறகு பன்னீர்செல்வம் நடத்தும் முதலாவது அமைச்சரவை கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.