தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 58வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், ஆலை தொடர்ந்து செயல்பட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியாகும் கழிவு மற்றும் புகை காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், கேன்சர், மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலி யுறுத்தி பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது ஆலையை விரிவாக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது.

இதனால் கொந்தளித்த அந்தப்பகுதி மக்கள்,   ஸ்டெர்லைட் ஆலை முன்பு போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் இன்று 58வது நாளை எட்டி உள்ளது.

மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 29ந்தேதி  ஆலை நிர்வாகம் சார்பில், ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 15 நாட்கள் மூடுவதாக அறிவித்தது.

இந்நிலையில, தற்போது மீண்டும் ஆலையில் உற்பத்தியை தொடங்க ஆலை நிர்வாகம் சார்பில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

மனுவை பரிசீலித்த தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், அனுமதி மறுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஆலை மேலும் 15 நாட்கள் பராமரிப்பு பணிக்காக  மூடப்படுவதாக அறிவித்து உள்ளது.