சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு  அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக ஆரம்பகட்ட பணிகளான சாலை அமைத்தல், கட்டுமானப் பொருட்களை சேகரித்தல் போன்ற வேலைகளை மேற்கொண்டு வருவதாக 15.4.2021 அன்று ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.

இந்த செய்தியின் அடிப்படையில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு, வனத்துறை மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் வனப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2006-ம் ஆண்டைய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை ஆகியவற்றின்படி உரிய அனுமதி பெற்றுள்ளதா? என்பதை அறிவதற்காக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள குழுமம் அனுமதி அளித்ததை திரும்ப பெறவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தடை ஆணை வழங்கவும் கோரி தமிழக அரசு 30.11.2018 அன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின், ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் திட்டங்கள் குறித்த வல்லுனர் குழு 19.7.2019 அன்று நடத்திய 25-வது கூட்டத்தில் தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவித்துள்ளது.

இதுதவிர, திட்டமதிப்பீட்டு இயக்குனரக இயக்குனர், மத்திய நீர்வள குழுமம், கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றையும் 5.12.2018 அன்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே, இத்திட்டத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிசீலிக்க எடுத்துக்கொள்வதாக தெரிய வந்ததையடுத்து, தமிழ்நாடு அரசு தெரிவித்த எதிர்ப்பின் பேரில், அடுத்தடுத்து நடைபெற்ற ஆணையத்தின் 3 கூட்டங்களில் மேகதாது அணை பற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த பிரச்சினை குறித்து, தமிழக அரசு வக்கீல்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.