சென்னை: தமிழ்நாடு  காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மையினர் பிரிவினரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு டிவிட்டர் தளமான @TNCCMinority என்ற டிவிட்டர் பக்கம்,  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி பரபரப்பாக இயங்கி வந்தது.  இதில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, முக்கிய தலைவர்களின் பேச்சுகள், சிறுபான்மை மக்களுக்காக காங்கிரஸ் கட்சி செய்த திட்டங்கள், செயல்பாடு குறித்த விபரங்கள் @TNCCMinority இந்த ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், அந்த டிவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. முடக்கம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பிரிவினருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் wow store எனும் முகப்பு போட்டோ பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரபு மொழியில் பயாே விபரங்கள் எழுதப்பட்டுள்ளது.

அதில், நவீன செல்போன் மற்றும் சோனி சாதனங்களை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற ஸ்டோர் இது. நீங்கள் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளலாம் எனும் வகையில் பயோவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சமூக விரோத செயல்கள் நடக்கும் முன்பு டிவிட்டர் பக்கத்தை முடக்கியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.