டெல்லி: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம், லடாக் தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதையும் ஏற்றுக்கொண்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யா ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர் நீதிபதிகள் எஸ்.கே. கௌல், சஞ்சீவ் கன்னா வேறு தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

ஜம்மு & காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது, மேலும், லடாக்கை யூனியன் பிரதேசமாக மறுசீரமைப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.  ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது தொடர்பாக மத்திய அரசு சமர்ப்பித்துள்ள நிலையில், கூடிய விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைக்கு செப்டம்பர் 30, 2024க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என்றும், சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. ஏற்கனவே நடைபெற்ற பல்வேறு கட்ட   விசாரணையின்போது, தற்போது 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு கல்வீச்சு சம்பவங்கள், கடையடைப்பு, முழு அடைப்புப் போராட்டங்கள் என எதுவும் நடத்தப்படுவது இல்லை. என்று மத்திய அரசு தெரிவித்தது. மேலும்,  , ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று  பிரமான பத்திரமும் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில், அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தேதியை  ஒத்தி வைத்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது.  இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றம் உள்பட பல பகுதிகளில்  பலத்த மற்றும்  விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஜம்மு & காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது சரி என கூறியுள்ள உச்ச நீதிமன்றம்  லடாக்கை யூனியன் பிரதேசமாக மறுசீரமைப்பதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.  மேலும், ஜம்முவுக்கு  விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அங்கு செப்டம்பர் 30, 2024க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று  இந்திய தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக் கொண்டது.

அரசியலமைப்புச் சட்டம் 370 வது பிரிவு நிரந்தரமானது அல்ல என்று கூறிய தலைமை நீதிபதி சந்திரசூட்,  370 ஆவது சட்டப்பிரிவை நீக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உண்டு என்றும் ,  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370 வது பிரிவு தற்காலிகமானதுதான் என்றவர்,  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள்  கொண்டஅரசியல் சாசன அமர்வு 3 விதமான தீர்ப்புகளை வழங்கி உள்ளது.

1) ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது, மத்திய அரசு எடுக்கும் முடிவை எதிர்த்து வழக்கு தொடர முடியாது – தலைமை நீதிபதி.

2) குடியரசு தலைவர் ஆட்சி இருக்கும்போது, மாற்ற முடியாத முடிவுகளை மத்திய அரசு எடுக்க முடியாது என்ற வாதங்கள் நிராகரிக்கப்படுகின்றன – உச்சநீதிமன்றம்

3) குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுக்கலாம் என்றும்  உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யா ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர் . நீதிபதிகள் எஸ்.கே. கௌல், சஞ்சீவ் கன்னா வேறு தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து கூறிய தலைமை நீதிபதி சந்திரசூட், மூன்று தீர்ப்புகள் இருந்தாலும், ஒரே தீர்ப்பாகதான் கொள்ள வேண்டும் என்றார்.

“இந்தியாவுடன் இணைந்த பிறகு தனது முழுமையான இறையாண்மையை காஷ்மீர் இழந்து விடுகிறது “இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு”ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதுடன், ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவு போர் சூழல் காரணமாக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக ஏற்பாடு , அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவு நிரந்தரமானது அல்ல. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவு தற்காலிகமானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  370வது சட்டப்பிரிவை நீக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்துள்ளதுடன், ஜம்மு காஷ்மீருக்கு விரைந்து மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கி, 2024 செப்டம்பருக்குள் அங்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.