குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கும் அமலாக்க இயக்குநரகம் (ED) துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விசாரணையைத் தொடர்வதன் மூலம் அத்தகைய நபர்களை காலவரையின்றி சிறையில் அடைக்கும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.

சுரங்க ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம் இந்த புதிய உத்தரவை பிறப்பித்தது.

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கொண்ட விசாரணையின் போது, புலனாய்வு விசாரணை முடியும் வரை நீதிமன்ற விசாரணை தொடங்காது என்று அமலாக்கத்துறை கூறமுடியாது, என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் கடந்த 18 மாதங்களாக சிறையில் இருக்கிறார். காலவரையின்றி விசாரணையை தொடரும் நடைமுறையை ED பின்பற்றுவது நீதிமன்றத்தை தொந்தரவு செய்வதாகவும், அது பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்றும் தெரிவித்தனர்.

விசாரணை முடியும் வரை கைது செய்யக்கூடாது என்பதற்கு தான் ஜாமீன். இது வழக்கமாக 60 நாட்கள் அல்லது 90 நாட்கள் ஆகும், அந்த காலத்திற்குள் விசாரணை முடிக்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இயல்புநிலை ஜாமீன் பெற உரிமை உண்டு.

ஆனால் ஜாமீன் வழங்குவதை தவிர்க்க துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் பிரச்சனையை மேலும் சிக்கலாகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்யும் போது விசாரணை உடனடியாக தொடங்க வேண்டும். காலக்கெடுவுக்குள் விசாரணை அதிகாரிகளால் விசாரணையை முடிக்கவோ அல்லது குற்றப்பத்திரிகை/இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவோ முடியாதபோது, ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர், இயல்பு ஜாமீன் பெற உரிமை பெறுகிறார் என்று கூறிய நீதிமன்றம் இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.