பெங்களூரு:
காவிரியில் தண்ணீர் திறக்க மீண்டும் கர்நாடக அரசு மறுத்து  உள்ளது. சுப்ரீம் இதுவரை இரண்டு முறை கண்டன்ம் தெரிவித்தும் கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.
karnataka
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தர விடக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு இருமுறை உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடக அரசு முதலில் பெயரளவுக்கு தண்ணீர் திறந்து விட்டு அதன் பிறகு நிறுத்தி விட்டது. தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுத்து விட்டது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் கர்நாடக அரசு வக்கீல் பாலி நாரிமன் தனது மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் எனவே தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று வாதிட்டார்.
வக்கீல்களின் காரசார விவாதத்துக்குப் பின் வழக்கு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு (வெள்ளிக் கிழமை) சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது அதுவரை மேலும் 3 நாட்களுக்கு 6,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியான உடனே தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கருத்து வெளியிட்டார். மேலும் காவிரியில் தண்ணீர் திறப்பதா? வேண்டமா? என அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும் என்றும் சித்தராமையா அறிவித்தார்.
அதன்படி பெங்களூர் விதான் சவுதாவில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மந்திரிகள் பாட்டில், ஜெயச்சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த முறை அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்து கன்னடர்களின் கோபத்துக்கு ஆளான பா.ஜனதா இந்த முறை அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது. அதன் மாநில தலைவர் எடியூரப்பா, ஈஸ்வரப்பா ஆகியோரும், ஜனதா தளம் சார்பில் எச்.டி.குமாரசாமி மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அனைவரும் ஒட்டு மொத்தமாக தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கூடாது என்று கருத்து தெரிவித்தனர். நாளை டெல்லியில் இரு மாநில அதிகாரிகள் கூட்டம் நடப்பதால் இதில் எடுக்கும் முடிவை பொறுத்து தண்ணீர் திறப்பது பற்றி முடிவு செய்யலாம் என்றும் யோசனை தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழகத்துக்கு உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் நாளை டெல்லியில் நடைபெறும் கூட்டத்துக்குப் பின் இறுதி முடிவு எடுப்பது என்றும் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இன்று மாலையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடக்கிறது. இதில் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.
கர்நாடக அரசின் இந்த செயல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும்,  இதேபோல் ஒவ்வொரு மாநிலமும் முடிவு எடுக்க முயற்சித்தால், இந்தியாவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பது கேள்விக்குறியாகவும், கேலிக்குறியதாகவும் மாறிவிடும் சூழல் ஏற்பட்டுவிடும்… சுப்ரீம் கோர்ட்டின் மாண்பு…. மறைந்துவிடும்…. என்று சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.