தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தர விட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

13பேரை துப்பாக்கி சூட்டுக்கு பலிகொண்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்து மூடியது. அதை எதிர்த்து வேதாந்தா தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையை   திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  அந்த வழக்கின் விசாரணையை அடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இதன் காரணமாக தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க உச்சநீதி மன்றம்  சொல்லவில்லை என்றும், ஆலை உடனே திறக்கப்பட மாட்டாது என்றும் கூறினார்.

இதற்கிடையில், ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க கோரி வேதாந்தா தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதை தமிழக அரசு நிராகரித்த நிலையில், வேதாந்தா இதுகுறித்து உச்சநீதி மன்றத்தில் தெரிவித்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்கு  மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

அப்போது ஸ்டெர்லைட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ஸ்டெர்லைட் ஆலையை இன்றே திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார். ஆனால், அதை ஏற்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.

மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும். ஆலை பராமரிப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்கு மட்டுமே ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

சில நாட்களாக பரபரப்புடன் காணப்பட்டு வரும் தூத்துக்குடியில், இன்றைய உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து பதற்றம் அதிகரித்து உள்ளது.