டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும்,  நாளை (மார்ச் 12-ம் தேதி) வணிக நேரம் முடிவடைவதற்குள் தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட எஸ்பிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் தொடர்பாக அவகாசம் கோரியை எஸ்.பி.ஐ வங்கியின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கடந்த 26 நாட்களாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எங்களது உத்தரவை பின்பற்றுங்கள்- எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியதுடன், வங்கி சீலிட்ட கவரை திறந்து தகவல்களை சேகரித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னதாக, தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. 2024ம் ஆண்டு த பிப். 15 ஆம் தேதி அளித்த வரலாற்றுப் புகழ் பெற்ற தீர்ப்பில், வங்கி மூலம் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பெறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்து, இந்த நடைமுறையை ரத்து செய்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இந்தத் திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்கள் முழு விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி பகிர வேண்டும் என்றும் அவற்றை மார்ச் 13 ஆம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காகத் தேர்தல் ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதன் மூலம் இந்த நன்கொடைத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில் பயனடைந்த அரசியல் கட்சிகள், அவற்றுக்கு நன்கொடை அளித்தவர்கள் பற்றிய முழு விவரங்களும் (இதுவரை ரகசியம் எனப் பாதுகாக்கப்பட்டவை) மக்களுக்குத் தெரிய வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

,தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

எஸ்பிஐ மனுவில், 2019, ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்துத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தர ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.  இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ர ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து இன்று விசாரித்து வருகிறது.

எஸ்பிஐ வங்கித் தரப்பில் வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே ஆஜரானார். அவர் முன்வைத்த வாதத்தில், எங்கள் கோர் பேங்கிங் அமைப்பில், வாங்குபவரின் பெயர் மற்றும் பத்திர எண் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டது. எனவே, தகவலை தொகுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம், முழு செயல்முறையையும் நாங்கள் மாற்றியமைக்க வேண்டும். நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு காலஅவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.

அதற்கு உச்சநீதிமன்றம், “எங்களுடைய தீர்ப்பின்படி வெளிப்படையாக தெரிவிக்கும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். வங்கி சீலிட்ட கவரை திறந்து தகவல்களை சேகரித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். அது மட்டும்தான் வேலை.  கடந்த 26 நாட்களாக நீங்கள் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், உங்கள் விண்ணப்பம் அது தொடர்பாக ஒன்றும் கூறவில்லை. நன்கொடையாளர்கள் தகவல்கள் எங்கு இருக்கிறதோ, அது அங்கேதான் இருக்கும். எங்களது உத்தரவை பின்பற்றுங்கள்”,  மிக எளிமையாக திரட்டக்கூடிய தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை தருவதற்கு அவகாசம் கேட்பது ஏன்? என்று சாடியதுடன்,  24க்கும் குறைவாக அரசியல்கட்சிகள்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன. அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு கால அவகாசம் கோருவது ஏன்? எஸ்பிஐ வங்கியிடமிருந்து நேர்மையான நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எஸ்பிஐ வங்கியால் செய்ய முடியாத எந்த வேலையையும் நாங்கள் சொல்லவில்லை என்றும் நீதிபதிகள் காட்டமான கேள்விகளையும் அறிவுறுத்தல்களையும் வைத்துள்ளனர்.

இந்தப் பணியை செய்ய எவ்வளவு காலம் ஆகும் என்று வங்கியைக் கேட்கவில்லை, நாங்கள் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம் என்று கூறியது. எனவே தகவல்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கால அவகாசம் கேட்பது சரியல்ல என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

இதோடு, தகவல் தர தாமதிக்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு வந்துள்ளது.

தேர்தல் பத்திரம் தொடர்பாக, இதுவரையிலும் மொத்தம், ரூ. 16 ஆயிரத்து 518 கோடி பெறுமதியுள்ள தேர்தல் நன்கொடைப் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி விற்றிருக்கிறது. அதாவது, இவ்வளவு பெரிய தொகையும் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு ‘ரகசிய’ நன்கொடைகளான ‘யார் யாராலோ’ வழங்கப்பட்டி ருக்கிறது. யார் யார் என்பதை மக்களுக்குத் தெரிவியுங்கள் என்றுதான் கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில், இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக எஸ்.பி.ஐ வங்கி, இதை வெளியிட அவகாசம் கோரியுள்ளது  குறிப்பிடத்தக்கது.