மெட்ரோ: சுரங்கபாதையில் ரெயில் பயணம்! பொதுமக்கள் உற்சாகம்!!

Must read

சென்னை:
சென்னையில் நேற்று தொடங்கப்பட்ட இரண்டாவது கட்ட ரெயில் சேவையில் மீனம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து ஏர்போர்ட் ரெயில் நிலையம் வரை ரெயில் சுரங்கப்பாதை வழியாக செல்கிறது.
தமிழ்நாட்டில் முதல் சுரங்கபாதை ரெயில் பயணம் இதுவாகும். எனவே, மெட்ரோ ரெயிலில் செல்லும் பொதுமக்கள் இந்த சுரங்க பாதை பயணத்தை மிகவும் உற்சாகமாகவும், குதுகலமாகவும் கொண்டாடி மகிழ்கிறார்கள். பலரும் செல்போன்களில் உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்டனர்.

 
சென்னை மெட்ரோ ரெயில் சேவையின்  விரிவாக்கமாக, மவுண்ட் – விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.  தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த வழித்தடத்தை தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்ராதாகிருஷ்ணன் இந்த விழாவில் கலநது கொண்டனர்.
இந்த வழித்தடம் உயர்மட்ட பாதையாக இருந்தாலும்  மீனம்பாக்கத்தில் இருந்து விமானநிலையத்துக்கு இடைப்பட்ட தூரத்தில் சுமார் 1கி.மீ தூரம்  ரெயில் சுரங்கப்பாதை வழியாக செல்கின்றன. இதில் பயணம் செய்ய பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இதுகுறித்து ராகிணி என்ற இளம்பெண் கூறியதாவது:  இந்த பாதையில் ரெயில் ஓட்டம் தொடங்குவதை  அறிந்து நானும் எனது நண்பர்களும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தோம்.
திரிசூலம் மலை, விமான நிலையம் ஆகியவற்றை ரெயிலில் போகும்போது,  மேலே இருந்து பார்க்க அழகாக தெரிகின்றன. முதல்முறையாக ரெயில்  சுரங்கப்பாதை வழியாக  செல்லும்போது மனதுக்கு ஒருவித பரபரப்பாகவும், மகிழ்ச்சியாக இருந்தது’ என்றார்.
மெட்ரோ ரெயில் சேவையின் அடுத்த கட்டம் குறித்து  அதிகாரிகள் கூறும்போது, “மெட்ரோ ரெயில் சேவையின்  அடுத்தகட்டமாக,  கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா  இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
தற்போது, அந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அடுத்த 6 மாதங்களில் இந்த சுரங்க பாதையில்  மெட்ரோ ரயில்சேவை தொடங்கப்படும்.
முதல்கட்டமாக நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். அப்போது, தினமும் 7.75 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.
 
மெட்ரோ ரயில் பயணம் இனிமையானதாக இருந்தாலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பு செயலாளர் கூறும்போது, “மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது வரவேற்கக்கூடிய ஒன்றாகும். ஆனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களும் அதிகளவில் பயணம் செய்யும் வகையில் கட்டணத்தை குறைக்க தமிழக அரசும், மெட்ரா ரயில் நிறுவனமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.
ஸ்மார்ட் கார்டு
நாடு முழுவதும் பேருந்துகள், மின்சார, மெட்ரோ ரயில்களில் மக்கள் பயணம் செய்யும் வகையில் ஒருங்கிணைந்த புதிய ஸ்மார்ட் அட்டையை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் கொண்டுவரவுள்ளது. இதற்காக, பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வரும்போது மக்கள் டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்பதை தவிர்க்க முடியும். சில்லறை பிரச்சினையும் ஏற்படாது.

More articles

Latest article