மதுரை,
நேற்று இரவு சென்னை போயஸ்கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் நடைபெற்ற சோதனை, போயஸ் கார்டன் குறித்த களங்கம் களையப்பட்டு சுத்தப்படுத்தப்படும் என்று அதிமுக எம்.பி.யான அன்வர்ராஜா தெரிவித்து உள்ளார்.
கடந்த வாரம் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய 187 இடங்களில்வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை யும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றனிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நேற்று இரவு சோதனை நடைபெறறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள அன்வர் ராஜா எம்.பி., போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனைக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினர்.
தற்போது நடந்த வருமான வரித்துறை சோதனை, ‘ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை சுத்தப்படுத்த சோதனை உதவியாக இருக்கும். இந்த சோதனையால் களங்கம் ஏற்படவில்லை, களங்கம் துடைக்கப்படும். போயஸ் கார்டன் இல்லத்தில் ஆவணங்களை பதுக்கி வைத்திருக்கலாம் என்ற தகவல் காரணமாக சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனைக்கு பின்னால் பா.ஜ.க. உள்ளதா? என்பது பின்னர்தான் தெரியவரும்’ என்றார் அன்வர் ராஜா.