சென்னை: தமிழ்நாடு அரசு சிறைபிடித்து வைத்துள்ள 120 ஆம்னி பேருந்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என கூறி இன்று 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஆயுத பூஜையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இதற்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதுபோல ரயில்களும் இயக்கப்பட்டன. மேலும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டன. இருந்தாலும் பல ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றதால், ஆம்னி பேருந்து நிர்வாகிகளும் சிறப்பு பேருந்துகளை இயக்கினர். இவற்றில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பொதுமக்கள் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த சனிக்கிழமையன்று (21ந்தேதி) அரசு சார்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, பல ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட 120 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், அதை அரசு விடுவிக்க மறுத்து வருகிறது. இதனால், அரசின் செயல்பாட்டை கண்டித்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்க மாட்டோம் என அறிவித்து உள்ளனர்.
இதுகுறித்து தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவித்துள்ளது. சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்தை பேருந்துகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் கூறி இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இன்று விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொள்ள சுமார் 1லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், அவர்களுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.