“சரித்திரம்” படைத்த பாடும் நிலாவின் வரலாறு

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
கின்னஸ் உலக சாதனை, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பல தேசிய விருதுகள்..பெற்ற பன்மொழி, பல்துறை வித்தகர்,

S.P.ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் சம்பமூர்த்தி − சகுந்தலம்மா தம்பதியருக்கு ஜூன் 4, 1946,  நெல்லூர் மாவட்டம்,  மெட்ராஸ் மாகாணம் தற்போது  (ஆந்திரப் பிரதேசம்) பிறந்தார்.

சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார்.

இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர்.

இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள் ஆவார்.

சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார்.

அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார்.

டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது.

கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.

1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி முதல் பரிசு பெற்றார்.

ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார்.இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர்.

இவர்களோடு சேர்ந்து எஸ்.பி.பி. இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

எஸ்.பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ்.பி.பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ்.பி.பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்

புகழ்பெற்ற இந்தியத்திரைப்பட இசைப் பாடகரான எஸ்.பி.பி. என்ற மூன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார்.

1966ல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் என பன்முக அடையாளம் கொண்டவர்.

இந்திய அரசு இவருக்கு 2001ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011ம் ஆண்டில்  பத்மபூஷண்விருதும் வழங்கியது.

இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.

சாதனைகள்

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார்.

எஸ்.பி. பி. முறையாக கர்நாடக இசையைப்பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம்
என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.

இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே.

பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார்.

தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின்
நந்தி விருதினை 25 முறையும் பெற்றார்.

இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.

எஸ்.பி.பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார்.

இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார்.

மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார்.

இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.