ற்போது இக்கட்டான சூழலில் இருக்கும் டி.டி.வி. தினகரன் திருவண்ணாமலை சென்று மூக்குப்பொடி சாமியாரை சந்தித்தபோது “அதிர்ச்சிகரமான” ஆசீர்வாதம் கிடைத்தது என அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

தினகரன் – முத்துகிருஷ்ணன் – மூக்குப்பொடி சாமியார்

சமீபமாகவே அ.தி.மு.கவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அணிக்கும் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அணிக்கும் கடும் மோதல் போக்கு நிலவியது.

இந்த நிலையில், “அதிமுக துணைப் பொதுச்செயலராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டது சட்ட விரோதமானது”  என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே தனது எதிர்காலம் குறித்து அறியவும், ஆசீர்வாதம் பெறவும் திருவண்ணாமலை பகுதியில் சுற்றித் திரியும் பிரபல சாமியாரான “மூக்குப்பொடி” சித்தரை சந்திக்க டி.டி.வி. தினகரன் நேற்று திருவண்ணாமலை சென்றார்.

தற்போது டி.டி.வி. தினகரன் பலவித குழப்ப நிலையில் இருக்கிறார். அவரது நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் திருவண்ணாமலையில் வசிக்கும்  முத்துக்கிருஷ்ணன் என்பவர்.  இவர் திருவண்ணாமலையில் ஓட்டல் தொழில் நடத்தி வருகிறார். அப்பகுதியில் மரியாதைக்குரிய மனிதர். “ அண்ணாச்சி” என்றுதான் இவரை அழைப்பார்கள்.

இந்த முத்துகிருஷ்ணன்,  மூக்குப்பொடி சாமியாரின் சிஷ்யகோடிகளுள் ஒருவர். இவர்தான் டி.டி.வி. தினகரனிடம், மூக்குப்பொடி சாமியாரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றால் பிரச்சினைகள் அத்தனையும் தீரும்  என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்தே தினகரன் திருவண்ணாமலை சென்றார்.  (படத்தில், தினகரன் அருகில் அமர்ந்திருப்பவர்தான் முத்துகிருஷ்ணன்.)

ஒரு இடைச் செருகல்: திருவண்ணாமலையில் தினகரன் மற்றும் குடும்பத்தினர் கட்டிய அம்மன் கோயில் ஒன்று உண்டு. ஆகவே அடிக்கடி அங்கு சென்றிருக்கிறார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்புகூட அந்த அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தார்.

ஆனால் இம்முறை சென்றது மூக்குப்பொடி சாமியாரை சந்திக்கத்தான்.

தனது நண்பர் முத்துகிருஷ்ணன் கூறியவுடன் மூக்குப்பொடி சாமியாரை சந்திக்க தினகரன் சென்றார்.

இந்த மூக்குப்பொடி சாமியாருக்கு என்று ஆசிரமம் ஏதும் கிடையாது. ஓரிடத்தில் இருக்க மாட்டார். தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

தவிர, அவர் திட்டி காறி உமிழ்ந்தாலோ, அடித்து உதைத்தாலோ சம்பந்தப்பட்ட பக்தர்களுக்கு வாழ்வில் பெரும் நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தினகரன் சென்றபோதும், வழக்கம்போல, சாமியார் எங்கேயோ சுற்றிக்கொண்டிருந்திருக்கிறார். அவரைத் தேடிப்பிடித்துத்தான் சந்தித்திருக்கிறார்கள்.

அப்போது உடனிருந்த அங்கிருந்த சிலரிடம் பேசினோம். அவர்கள், “ஆரம்பத்தில் அண்ணன் (தினகரன்)  முகத்தையே சாமியார் பார்க்கவில்லை. வழக்கமாக அந்த சாமியார் திட்டினாலோ, அடிச்சு உதைச்சாலோதான் ஆசீர்வாதம் கிடைச்சமாதிரி அர்த்தம். அதனால சாமியார் தன்னோட முகத்தையே பார்க்கலையே என்று அண்ணன் ( தினகரன்) அப்செட் ஆகிவிட்டார்.

சாமியாருக்கு எதிரே சம்மணம் போட்டு அமர்ந்துவிட்டார். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. நீ்ண்ட நேரம் கழித்து, சாமியார் கண் விழித்தார். என்ன நினைத்தாரோ அண்ணனை (தினகரன்) பார்த்து தூ..என துப்பினார்.. பிறகு ஏதோ திட்டுவது போல முனங்கினார். இதைப் பார்க்க அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் அதன் பிறகுதான் அண்ணன் உட்பட அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.

சாமியாரின் முழுமையான ஆசீர்வாதம் கிடைத்ததால்தான் வழக்கத்தைவிட உற்சாகமாக களத்தில் இறங்கியிருக்கிறார் அண்ணன். துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து களம் காண தயாராகிவிட்டார்” என்று உற்சாகமாக கூறுகிறார்கள் அப்போது தினகரன் உடன் இருந்த சிலர்.

மூக்குப்பொடி சாமியாரின் மகிமைகள், விசித்திர குணாதிசயங்கள் பற்றிய சுவையான கட்டுரை.. அடுத்து...