மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டு 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்டிருக்கிறது. ஆனால் ஏற்கனவே 100 ரூபாய் நோட்டுக்களுக்கு கடும் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் பொதுமக்கள் புது 2000 ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்துக்கொண்டு சில்லறை மாற்ற வழியின்றி அலைகின்றனர்.
எந்த கடைக்கு போனாலும் சில்லறை இல்லை என்ற நிலை நிலவுகிறது. ஒன்று அந்த 2000 ரூபாய்க்கும் பொருட்கள் வாங்குங்கள் என்கிறார்கள் அல்லது தெரிந்த கடைக்காரராக இருந்தால் அடுத்த முறை கடைக்கு வந்து பொருட்கள் வாங்கும்போது சேர்த்து கொடுங்கள் என்கிறார்கள்.
இந்திய கரன்சியின் 80% நோட்டுக்களை 500 மற்றும் 1000 ரூபாய்களாக அச்சடித்துவிட்டு திடீரென்று அவற்றை தடைசெய்தால் சில்லறைக்கு எங்கே போவது? 100 ரூபாய் நோட்டுக்கள் கொஞ்சமாக இருப்பதால் அவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மருந்தகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்றவற்றில் பழைய நோட்டுக்களை பெற்றுக்கொண்டாலும் அவற்றிற்கு அவர்களால் சில்லறைகள் கொடுக்க முடிவதில்லை.
இந்த பிரச்சனையால் இன்று பெரும்பாலான வியாபாரிகள் வெறுத்துப்போய் தங்கள் கடைகளை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். கார்டுகள் வழியாக பரிவர்தனை செய்ய சாத்தியமுள்ள பெரும் அங்காடிகளும் மால்களும் மாத்திரமே திறந்திருந்ததாகவும் அவர்களும் கார்டு மூலம் மட்டுமே நீங்கள் பணம் செலுத்த முடியும் என்று சொல்லுவதாகவும் டெல்லி வாசி ஒரு குமுறுகிறார்.
ஓலா, உபர் ஆகிய போக்குவரத்து நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை சில்லறை கொடுக்க சொல்கின்றன, அல்லது எலக்ட்ரானிக் வாலட் வழியாக பரிவர்த்தனை செய்யச்சொல்லி வற்புறுத்துகின்றன.
மத்திய அரசு அறிவித்தபடி, ஏடிஎம்கள் வெள்ளிக்கிழமையன்று இயங்கினாலும் அதில் நிரப்பபட்ட மொத்த பணமும் சில மணிநேரங்களிலேயே காலியாகிவிட்டதாக தெரிகிறது. நபருக்கு ரூ.2000 வீதமே ஒருநாளில் ஒருவர் ஏடிஎம் மூலம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடும் இருக்கிறது.