சென்னை:
“தி ரைசிங் சன்” வார இதழ் மீண்டும் வெளியாகிறது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி 80 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து பயணித்து வரும் நிலையில், திமுகவின் கருத்துகளை பிற மாநிலத்தவர் அறிந்துகொள்ள கடந்த 1971 ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டதுதான் தி ரைசிங் சன். முரசொலி மாறனை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட அந்த ஆங்கில வார இதழ், பல்வேறு காரணங்களால் 1975 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

மீண்டும் கடந்த 2005 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயத்தில் அப்போதைய திமுக தலைவரான கருணாநிதியால் மீண்டும் வெளியிடப்பட்ட தி ரைசிங் சன் போதிய வரவேற்பு இல்லாததன் காரணமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

அதற்கு மீண்டும் உயிர்கொடுத்துள்ளார் தற்போதைய திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின். வரும் செப்டம்பர் மாதம் திமுக தொடங்கப்பட்ட 17 ஆம் தேதி அந்த வார இதழை வெளியிட திட்டமிட்டு அதற்கான பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். காலமாற்றத்திற்கேற்ப டிஜிட்டல் வடிவிலும் வெளியாகும் வார இதழ் வெளியீட்டு நிகழ்வை டில்லி அரசியலின் அடுத்தக்கட்ட நகர்வாகவும் மேற்கொள்ளவுள்ளார்.

டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியையும், “தி ரைசிங் சன்” ஆங்கில வார இதழ் வெளியீட்டு விழாவையும், பிற மாநிலங்களைச் சேர்ந்த, தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து வெளியிடவும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.