சென்னை: டங்ஸ்டன் எதிர்ப்பு தீர்மானத்தை பாஜக ஏற்கிறதா? எதிர்க்கிறதா? என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியதுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கும் பதில் அளித்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக திமு கதலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில், அவை முன்னவர் துரை முருகன் டக்ஸ்டன் திட்டத்துக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அவை கூடியதும் மறைந்த பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் அவை முன்னவர் துரைமுருகன், டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், “மதுரையில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அப்பகுதியையும், அப்பகுதியில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒப்பந்த வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கையை கைவிடுமாறு தமிழக முதல்வர் பிரதமரிடம் ஏற்கெனவே வலியுறுத்தி உள்ளார்.
இந்த தீர்மானத்தின்மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்தை தெரிவித்தனர். அதிமுக சார்பில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இதற்கான ஏலம் பிப்ரவரியில் நடைபெற்றபோது, திமுக அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, 10 மாதமாக அதை கண்டுகொள்ளாத நிலையில், மக்களை எதிர்ப்ப்பு தெரிவித்ததும், திமுகவும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என கடுமையாக சாடினார். மேலும், இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் திமுக எம்பிக்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? நாடாளுமன்றத்தை ஏன் முடக்கவில்லை? டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக அரசு உரிய நேரத்தில் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை. சுரங்கம் அமைந்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் போராட்டம் நடத்தியபின் தான் முதலமைச்சர் கடிதம் எழுதினார் என குற்றம் சாட்டியவர்,. பொதுமக்கள் போராட்டத்திற்கு பிறகு வேறு வழியின்றி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஒப்பந்தப்புள்ளி கோரிய போதே தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் திட்டத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த தீர்மானத்தின்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த தீர்மானத்தை பாஜக ஏற்கிறதா? இல்லையா?; வரவேற்கிறீர்களா இல்லையா ? ஒரே வரியில் பதில் சொல்லுங்கள் என்று பாஜக உறுப்பினர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் பேசியுள்ளோம்; விரைவில் நல்ல செய்தி வரும் என்றார்.
முன்னதாக தீர்மானத்தின் மீது பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், அந்தப் பகுதி மக்களின் பாதிப்பு இல்லாத வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மூலம் கூடிய சீக்கிரம் மக்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும் என ஆதரவு என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் பேசினார்.
இதனை அடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ” அப்படி என்றால் நீங்கள் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்கிறோம் ” என பேசி முடித்தார்.
அதேபோல், பாமக சார்பில் ஜிகேமணி பேசுகையில், ” இந்த தீர்மானம் குறித்து ஆழமாக சிந்தித்து எடுக்கப்பட்ட தீர்மானம். மாநில அரசு திட்டத்தை கொண்டு போகும்போது அதற்கு மத்திய அரசு இசைவு தர வேண்டும். அதேபோல, மத்திய அரசு மாநில எல்லைக்குள் ஒரு திட்டத்தை கொண்டு வரும்போது, மாநில அரசின் அனுமதி குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும்.” எனக் கூறினார்.
விவாதத்தின்மீது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், டங்ஸ்டன் சுரங்க சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர் என்று பதில் தெரிவித்ததாகவும், அப்போது, முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி அரிட்டாபட்டி மக்களுக்கு தெரிவித்தார். ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம். எங்களது கண்டனக் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறோம்.
தமிழக அரசு அலட்சியமாக இருந்ததாக எதிர்க்கட்சி நினைக்கிறது; ஆனால் அப்படியில்லை என்று கூறிய ஸ்டாலின், நான் முதலமைச்சராக இருக்கும்வரை டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன். டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம்; ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சுரங்கத்திற்கான ஏலம் விட்டாலும் மாநில அரசு அனுமதி கொடுக்காது என பேரவையில் உறுதி அளிக்கிறேன் கூறியதுடன், திமுக ஆட்சியில் எந்த விஷயத்திலும் அலட்சியமாக இருந்தது இல்லை. வேகமாக பேசுவதால் ஏதோ சாதித்துவிட்டதாக எண்ணிக்கொள்ள வேண்டாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தீர்மானம் அதிமுக உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.