சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான, ரிப்பன் பில்டிங் சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே அமைந்துள்ள பழமையான விக்டோரியா ஹால் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி ஆட்சி செய்துவந்த காலகட்டமான, இங்கிலாந்து மகாராணி விக்டோரியா ராணியாகப் பட்டம் ஏற்று 50-வது ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், சென்னையில், அவரது பெயரில் விக்டோரியா பப்ளிக் ஹால் எனப்படும் மூன்றடுக்கு கட்டிடம் கட்டப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கும்- மாநகராட்சி கட்டிடத்துக்கும் இடையில் சிவப்பு வண்ணத்தில் கம்பீரமான கோபுரத்துடன் காட்சியளிக்கும் இந்த கட்டிடம் இந்தோ-சராசெனிக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்த கட்டிடம் 1890-ம் ஆண்டு திருவாங்கூர் மகாராஜா, மைசூர் மகாராஜா, புதுக்கோட்டை அரசர் உள்ளிட்டவர்களின் உதவியுடன் ரூ.16,423 செலவில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 57 கிரவுண்ட் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டது.
மூன்று தளங்கள் கொண்ட இந்த விக்டோரியா அரங்கில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு, இந்த கட்டிடம், சென்னை மாநகரத்தின் கலையரங்கமாகவும், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடமாகவும் மாறியது. 1893 -ம் ஆண்டு பிரம்ம ஞான சபையின் முதல் கூட்டம் விக்டோரியா அரங்கத்தில் தான் கூட்டப்பட்டது என வரலாறுகள் தெரிவிக்கின்றன. அதுபோல, . 1897 -ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இங்கு பொதுக்கூட்டம் நடத்தி சொற்பொழிவாற்றியதகவும் கூற்பபடுகிறது. இதுபோல தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிக்கு முன்னோடியாக இருந்த நீதிக்கட்சியின் முதல் பொதுக்கூட்டமும் இங்குதான் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
விக்டோரியா ஹாலின் கீழ்த்தளத்தில் மியூசியமும், நூலகமும் இருந்தன. முதல் தளத்தில் நாடகங்களும் பல கூட்டங்களும் நடத்தப்பட்டன. அந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி, கலைகளை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விக்டோரியா அரங்கம் கட்டப்பட்டதாகவும், சென்னையில் முதன் முதலில் திரைப்படம் திரையிடப்பட்ட அரங்கம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
இந்த விக்டோரியா ஹால் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாததால், அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, விக்டோரியா ஹாலை சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புணரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ.32.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள 2023-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக விக்டோரியா ஹாலின் முழு கட்டடத்தையும் அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது வரை, நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு, மரத்தளம் மற்றும் மரப்படிகட்டுகள் சீரமைப்பு, கட்டடத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் ஆகிய பகுதிகள் சீரமைப்பு, கட்டடத்தின் மையப் பகுதியில் உள்ள கலை அரங்கங்கள் புதுப்பிக்கப்பட்டு வண்ண ஓவியங்கள் தீட்டப்படுவது போன்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. விக்டோரியா ஹாலில் மேற்கூரையை சீரமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த பணிகளும் முழுவதுமாக நிறைவடைந்துள்ளன.
மேலும், கட்டடம் முழுவதும் காண்போரை கவரும் வகையில், முகப்பு விளக்குகள் மற்றும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அரங்கம் முழுவதும் குளிரூட்டப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் முக்கியஸ்தர்களின் நிர்வாக இடமாகவும், கலாச்சார இடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக முதல் தளத்திலிருந்து மேல் தளங்களுக்கு செல்ல நவீன முறையில் “கண்ணாடி லிப்ட்” அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கென தனித்தனியாக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மழைக்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு வடிகால்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இறுதிக்கட்டமாக, தற்போது கட்டடத்திற்கு வண்ணம் பூசுதல், ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட சில வேலைகள் நடைபெற்று வருகின்றன.. மேலும், கட்டிடத்தின் வெளிப் பகுதியில் பசுமையான புல் தரைகள், கட்டடத்தைச் சுற்றியும் சிமெண்டில் ஆன இன்டர் லாக்கிங் கற்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன” புனரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், மீதமுள்ள பணிகள் விரைவாக முடிக்கப்பட உள்ளது.
அதனால் விக்டோரியா ஹாலை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அடுத்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.